கானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்: எஸ்.பி.பி மறைவுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்
கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
எஸ்.பி.பி மறைவு குறித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பதிவில், ‘திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற S.P.பாலசுப்ரமணியம் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. எஸ்.பி.பி மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. #SPBalasubramaniam அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். #RIPSPB pic.twitter.com/jOgiwSsJCK
— O Panneerselvam (@OfficeOfOPS) September 25, 2020
அவருடைய அறிக்கையில், ‘எஸ்.பி.பி திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். தனது இன்னிசைத் தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல அவரது பாடல்களைக் கேட்கும் அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.
பாடலுக்கு என்றே பிறந்தவர் என்று சொல்லுமளவுக்கு 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அதிக எண்ணிக்கையிலான பாடலைப் பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை படைத்தவர் ஆவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.