கடைசீல பிரியாணி விமர்சனம்
ஒய் நாட் எக்ஸ் மற்றும் மேஸ்ட்ரோஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சசிகாந்த் மற்றும் சக்கரவர்த்தி ராமசந்திரா தயாரித்து நிஷாந்த் களிதிண்டி இயக்கியிருக்கும் படத்தில் விஜய் ராம், வசந்த் செல்வம், ஹக்கீம் ஷா, தினேஷ் மணி, விஷால் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப், அசீம் மொஹம்மத், இசை- வினோத் தணிகாசலம், எடிட்டிங்-இக்னீசியஸ் அஸ்வின், பிஆர்ஒ -நிகில்.
தாத்தா மற்றும் தாய் வசந்த் செல்வம்,தினேஷ் மணி ஆகிய இரண்டு மகன்களை வளர்க்க இவர்களை விட்டு பிரியும் தந்தை கடைசி மகனான விஜய் ராமை வளர்கிறார். அடிதடி, சண்டை என்று சுற்றித்திரியும் இரண்டு மகன்களைப் போல் விஜய் ராம் வளரக்கூடாது நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் தந்தை. ஆனால் எதிர்பாராத விதமாக தந்தை கொல்லப்பட, அதற்கு காரணம் கோட்டயத்திலுள்ள ரப்பர் எஸ்N;டட் ஒனர் விஷால் ராம் என்று சகோதரர்கள் கண்டுபிடிக்கின்றனர். இவரை கொன்று வருவாறு தாய் சொல்ல இரண்டு மகன்களும் விஜய் ராமை அழைத்துக்கொண்டு கேரளாவில் உள்ள கோட்டயத்தில் இருக்கும் ரப்பர் எஸ்டேட்டிற்கு செல்கின்றனர்.அங்கே விஷால் ராமை போட்டுத் தள்ளி விட்டு தப்பிக்க நினைக்க அவரின் சைக்கோ மகனான ஹக்கீம் ஷாவிடம் மாட்டிக் கொள்கின்றனர். இறுதியில் மூன்று சகோதரர்களின் கதி என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.
வசந்த் செல்வம், தினேஷ்மணி இவர்களின் பழி வாங்கும் குணமும், மற்றவர்கள் மோசமாக பேர் வைத்து அழைக்கும் விதமும் வித்தியாசத்தை கொடுத்தாலும், வசந்த் செல்வத்தின் இயல்பான நடிப்பு படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட். இவர்கள் இருவரும் முரட்டுதனமானவர்கள் என்றாலும் வண்டியில் சவப்பெட்டி திறந்து ஒருவன் வெளியே வர வண்டியில் இருந்து விழுந்து இருவரும் இறக்கும் தருணம் எதிர்பாராத திருப்பம். விஜய் ராம் அப்பாவியாக அண்ணன்களின் பின்னால் ஒடுவதும், அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்து முடியாமல் தவிப்பதும், அண்ணன்கள் இறக்க இறுதியில் சைக்கோ தாதாமகனிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் அதன் பின் கடைசியில் தன் ஆசை நிறைவேற பிரியாணி சாப்பிடுவது என்று படம் முழுவதும் அவரின் நடிப்பு நிறைவாக இருக்கிறது.
ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப், அசீம் மொஹம்மத்; இருவரின் பங்களிப்பு ரப்பர் எஸ்டேட், காடுகள், மலைரோடுகள், ரப்பர் எஸ்டேட் நடுவில் வீடு, தப்பிக்க ஒடும் காட்டுப்பகுதி என்று பார்த்து பார்த்து சிறப்பாக காட்சிக்கோணங்களை வைத்து நாம் பயணிப்பது போல் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சிறு சிறு சப்தங்கள் கூட மென்மையாக கேட்கும்படி ஒலிகளை அமைத்து சிறப்பாக பின்னணி இசையில் மெய் மறக்கச் செய்துள்ளார் வினோத் தணிகாசலம்.
முதல் பாதியில் சில இடங்கள் தடுமாறினாலும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக கொடுத்துள்ளார் எடிட்டர் இக்னீசியஸ் அஸ்வின்.
பிளாக் காமெடி கலந்து பழி தீர்க்கும் கதையில் கொலைசெய்யும் இடங்களில் வன்முறை, ரத்தம் என்று பயமுறுத்தினாலும், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் படத்தின் மீது கவனத்தை திருப்பி விடுவதை சாமர்த்தியமாக கையாண்டுள்ளார் இயக்குனர் நிஷாந்த் களிதிண்டி. விஜய் சேதுபதி படத்தின் கதையை சொல்லிக்கொண்டு வருவதால் திரைக்கதை புரிய ஆரம்பிக்கிறது, இறுதியில் விஜய் ராமை காப்பாற்ற ஒரு சீனில் தலைகாட்டிவிட்டு செல்வது சிறப்பு. முதல் பாதியில் கதாபாத்திரங்கள் பேசுவது மெதுவாக கேட்பதால் சில சமயங்களில் புரியாமல் இருக்கிறது, சம்பவங்களை வைத்து யூகித்து புரிந்து கொள்ள முடிந்தாலும் இரண்டாம் பாதியில் அதை சரி செய்து விடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் நிஷாந்த் களிதிண்டி.
மொத்தத்தில் கடைசீல பிரியாணி சாப்பிட சாப்பிட தான் சுவை தெரிகிறது அதைப் போல் படம் பார்க்க பார்க்க தான் கதையின் சிறப்பம்சம் இறுதியில் வெளிப்படுகிறது.