இந்தியக் கதையை உருவாக்கி நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம் – இயக்குநர் ராஜமௌலி ஓபன் டாக்
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி, அஜய் தேவ்கன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ராஜமௌலி பதிலளித்தார். நிரூபர்கள் தரப்பிலிருந்து, ‘உங்களுக்கு ஹாலிவுட் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்ததா?” என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ராஜமௌலி, ”வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், ஹாலிவுட்டிலிருந்து எனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. அப்படியே எனக்கு வாய்ப்பு வந்தாலும், இந்தியக் கதையை உருவாக்கி நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம். நம் நடிகர்களே மிகவும் திறமையானவர்கள்தான்.
பாலிவுட் நடிகர்கள் ஹிந்திப் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதும், தென்னிந்திய நடிகர்கள் தென் மொழிகளில் நடிக்க வேண்டும் என்பதும் ஒரு மாயை. நடிப்புக்கு மொழி கிடையாது. பெரும்பாலான நடிகர்கள் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறார்கள். வெவ்வேறு மொழிகளில் இருந்து வெவ்வேறு இயக்குனர்கள் அவர்களை அணுகுகிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலையை நிறையவே பார்க்கலாம்”.
தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை தான் நான் இயக்குவேன்.
பாகுபலியைப் போன்றே ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயமாக பேசப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராம்சரண் மீண்டும், தான் பிறந்த இடமான சென்னைக்கு வருவது தனது தாய், தந்தை மற்றும் உறவினர்களை நினைவு படுத்துவதாக கூறினார்.
தமிழ் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோர் தெலுங்கு படங்களில் நடித்தால் முதல் ஆளாய் வரவேற்பேன் என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்தார்.