அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை!
இணையற்ற நடிப்பாற்றல், இசையமைப்பாளர்கள் கொண்டாடும் குரல் வளம், முந்தைய கதாபாத்திரத்தை பிரதி எடுக்காத நேர்த்தியான நடிப்பு என தமிழ் சினிமாவை அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக ஆட்சி செய்த நடிப்பு ராட்சசி, அனைவராலும் ஆச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா. ஏழ்மையின் காரணமாக நாடக கொட்டகைக்குள் தின்பண்டம் விற்கும் சிறுமியாக வாழ்க்கையை தொடங்கிய மனோரமா, பின்னர் தன் வாழ்க்கை முழுவதையும் நாடகம், திரைப்படம் என கலைத்துறைக்காக அர்பணித்தார். கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தன் கலைப் பயணத்தை தொடங்கிய மனோரமா மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானர். பின்னர் களத்தூர் கண்ணம்மா, தில்லானா மோகனாம்பாள் என தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கவே அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. கிடைக்கும் கதாபாத்திரத்தில் ஒப்பற்ற நடிப்பை வெளிப்படுத்தும் மனோரமா தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் ஜில்ஜில் ரமாமணி கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியிருந்த உடல் மொழி அவருக்கு சிவாஜிக்கு நிகரான ஈர்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது.
செந்தமிழ், கொங்கு தமிழ், இலங்கை தமிழ், சென்னை தமிழென அனைத்து வட்டார மொழிகளிலும் பேசும் வல்லமை பெற்றிருந்தது மனோரமாவிற்கு மாபெரும் பலமாக அமைந்தது. கதாநாயகியாக நடித்து இருந்தாலும் 10 ஆண்டுகள் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்து இருக்கும். ஆனால் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானதால் தான் ஐந்து தலைமுறை கடந்து 50 ஆண்டுகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததற்காக மகிழ்ச்சி வெளியிட்டார் மனோரமா.
மனோரமா திரையில் தோன்றினால் உடன்நடிக்கும் வேறெந்த நடிகர் மீதும் கவனம் திரும்பாது அளவிற்கு ரசிகர்களை தன் நடிப்பாற்றலால் கட்டிப் போடும் வல்லமை பெற்றிருந்தார் என்பதற்கு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் மனோரமா நடித்திருந்த கண்ணம்மா கதாபாத்திரம் நல்ல உதாரணம்.
நாகேஷ் உடன் அதிக திரைப்படத்தில் ஜோடியாக நடித்த மனோரமா சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு என பல தலைமுறைகள் கடந்தும் நகைச்சுவை காட்சிகளில் நடித்து அசத்தினார். குறிப்பாக சின்ன கவுண்டர் திரைப்படத்தில் கவுண்டமணியுடன் மனோரமா நிகழ்த்தும் உரையாடல் இன்றளவும் ரசிகர்கள் நினைவில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
வா வாத்தியாரே வூட்டாண்ட, மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் போன்ற பாடல்கள் இன்றளவும் மனோரமா குரலில் ரசிகர்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் மிக முக்கியமான பாடல்கள். நவராத்திரி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்தது போல கண்காட்சி திரைப்படத்தில் 9 வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் மனோரமா. அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, என்டிஆர் என ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைக்குரிய மனோரமா 1500 திரைப்படங்களிலும் 5 ஆயிரம் மேடை நாடகங்களிலும் நடித்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
உலகில் வேறு எந்த நடிகையும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு மனோரமா மறைவிற்கு நேரில் வந்து இரங்கல் தெரிவித்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, மனோரமா தனது மூத்த சகோதரி என்றும் தன்னை அம்மு என பாசமுடன் எப்போதும் அழைப்பவர் என்றும் கண்கலங்க பேசியது பலரையும் மனம் உருக செய்தது.தலைமுறைகள் கடந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்த மனோரமா இன்னும் பல நெஞ்சங்களில் தாயாக, சகோதரியாக, பாட்டியாக தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் ஏதோ ஒரு வடிவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.