ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட அப்டேட்

0
160

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட அப்டேட்

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான் பல விருதுகளை வென்ற இயக்குநரான அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ஜவான்’ படம் குறித்து, பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ‘ஜவான்’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் #AskSRK எனும் பிரிவில் ரசிகர்களுடன் ஷாருக்கான் உரையாடினார். இதன் போது ‘ஜவான்’ படம் குறித்தும் ,அதன் வெளியீட்டு தேதியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும்.. ரசிகர்கள் ஆர்வத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

‘ஜவான் ஏன் தாமதமாகிறது?’ என்று கேட்டதற்கு, ” பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க மிக்க படைப்பை வழங்க பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை” என்று கூறியதுடன், ” படக்குழுவினர் அனைவரும் இடைவேளையின்றி பணியாற்றி, தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தற்போது அனைவரும் தங்களது வேலையை எளிதாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.” என்றும் குறிப்பிட்டார்.

‘ஜவானில் எது மிகவும் பிடிக்கும்?’ என்று கேட்ட போது, ” என்னைப் பொறுத்தவரை இது ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லீ மற்றும் அவரது குழுவினர் தான் மாஸ். அவர்களின் ஸ்டைல் மற்றும் அணுகுமுறை தான் தன்னை மிகவும் உற்சாகப்படுத்தியது” என்றார்.

‘ஜவான்’ பட போஸ்டரில் ஷாருக்கானை ஏன் காணவில்லை?, என யோசிப்பவர்களுக்கு, அவரது பெயர் மட்டும் போதும் என தயாரிப்பாளர்கள் உணர்ந்ததாகவும், ஜவானில் நடித்திருக்கும் சக நடிகர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் ஷாருக் கான் தெரிவித்தார்.

நயன்தாராவை பற்றி குறிப்பிடுகையில், ” அவர்கள் அழகானவர். மிகவும் இனிமையானவர். அவருடன் பணியாற்றுவதற்கு எளிதாகவும், சௌகரியமாகவும் இருந்தது. மிக்க மகிழ்ச்சி” என்றார்.

விஜய் சேதுபதி பற்றி குறிப்பிடுகையில், ” அடக்கமான மனிதர். சிறந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.

படத்தின் இயக்குநரான அட்லீ, உங்களை தமிழ் மொழியை கற்க வைத்தாரா? என்று கேட்டபோது, ” அட்லீயும், அனிருத்தும் இணைந்து, என்னை தமிழில் சில பாடல் வரிகளை பாட வைத்துள்ளனர். நான் அவற்றை சரியாக உச்சரித்திருக்கிறேன் என நம்புகிறேன்.” என பதிலளித்தார்.

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ஷாருக்கான் நடிக்கும் இந்த திரைப்படம், பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.