விளம்பரங்களில் நடிப்பவர்கள் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது ; இயக்குனர் பேரரசு காட்டம்

0
201

விளம்பரங்களில் நடிப்பவர்கள் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது ; இயக்குனர் பேரரசு காட்டம்

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை A.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இன்று இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் மற்றும் மயில்சாமியின் மகன் அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குறும்பட குழுவினரை பாராட்டியதுடன் நடிகர் மயில்சாமி குறித்த தங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அசோக்குமார் பேசும்போது,

“இது என் மகனின் முதல் முயற்சி. இந்த குறும்படத்தை பார்த்தபோது என் மகனும் என்னை மாதிரியே இருக்கிறான் என்கிற திருப்தி ஏற்பட்டது. அவரது துணிச்சலை பாராட்டுகிறேன். இந்த குறும்படத்தால் நமக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இது மக்களுக்கு சென்றடைய வேண்டும்.. அதனால் இதை இலவசமாகவே அவர்களுக்கு கொண்டு சேர் என்று கூறிவிட்டேன்” என கூறினார்.

நடிகை ரேகா நாயர் பேசும்போது,

“இந்த குறும்படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் என்னை பார்த்தது கூட கிடையாது. ஆனால் மனிதர்களை, விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்று தொடர்ந்து சமூக அவலங்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் எனக்கு இந்த படம் கிடைத்தது ஒரு கிப்ட் என்றே சொல்லலாம். விளம்பரங்கள் பொதுமக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் விளம்பரத்தில் யார் நடித்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அதன் உண்மைத்தன்மை அறியாமல் நடிக்க வேண்டியது இல்லை. நமக்கென ஆறாம் அறிவு இருக்கு.. அதை பயன்படுத்தி ஆராய்ந்து நடியுங்கள்.. மயில்சாமியை பொறுத்தவரை யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர். சென்னையில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் சூழ்ந்தபோது நானும் அவரும் மக்களை தேடி சென்று உணவு அளித்தோம். அடுத்தவருக்காகவே வாழ்ந்தவர் மயில்சாமி” என்று கூறினார்.

மயில்சாமியின் மகன் அன்பு பேசும்போது,

“இந்த படத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என தயங்க வேண்டாம். இந்த படத்திற்கு எங்க அப்பாவே மிகப்பெரிய விளம்பரமாக இருக்கிறார். என்னுடைய தந்தை படப்பிடிப்பு தளங்களில் ஒரு இடத்தில் கூட உட்கார மாட்டார். சுற்றிக்கொண்டே இருப்பார்.. எல்லோர் மீதும் அன்பு காட்டுவார். என் அப்பாவின் வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக்கொண்டது பெரியவங்க சொல்ற பேச்சை கேளுங்க.. உங்களுக்கு என தனியாக நினைவுகளை ஞாபகங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்பது தான்” என்று கூறினார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது,

“வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படி நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்பிபி, விவேக், அடுத்து மயில்சாமி உள்ளிட்ட சிலரின் மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வை தந்தன.

மயில்சாமி ஒரு சிவ பக்தர் மட்டுமல்ல அவர் தீவிரமான எம்ஜிஆர் பக்தரும் கூட. ஆனால் அந்த இருவருக்குமே அவர் உண்மையாக இருந்தார். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி முதலமைச்சர், அமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் பின்னால் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டார்கள். ஆனால் தான் இறக்கும் வகையில் எம்ஜிஆரின் உண்மை தொண்டனாகவே அவர் பெயர் சொல்லும் விதமாக வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி. அதுமட்டுமல்ல தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார். முதல் படத்திலேயே சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்ன இயக்குனர் என இந்த குறும்பட இயக்குனர் ராகுல் தனது நெஞ்சை நிமித்தி அமரலாம்..

விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். காரணம் மக்கள் உங்களை நம்புகிறார்கள். முதலில் நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அந்த பொருளை ஒரு மாதம் வரை நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.. சரியில்லாத ஒன்றை சரி என நம்மை நம்பும் மக்களிடம் கொடுப்பது நம்பிக்கை துரோகம்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது,

“நல்ல கருத்தை சொல்லும் விதமாக இந்த விளம்பரம் என்கிற குறும்படம் உருவாகியுள்ளது. இது தற்போது நாட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான். சினிமாவில் நடிப்பதற்கு முன் முழு ஸ்கிரிப்டையும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கதை, கதாபாத்திரம் பற்றி தெளிவு வந்த பின்னர் தானே நடிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.. அப்படி என்றால் விளம்பரத்திலும் நடிக்கும் போது அதை பின்பற்ற வேண்டும் என்பது அதற்கும் பொருந்தும் தானே..? மயில்சாமி எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தவர் என பெயர்பெற்றவர். அவர் இறந்ததற்கு பின்னாடி வரும் இந்த குறும்படம் கூட சமுதாயத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் விதமாக விழிப்புணர்வுடன் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

“இந்த குறும்படத்தை பார்க்கும்போது இயக்குனர் ராகுல் மிகச்சிறந்த இயக்குனராக வரப்போகிறார் என்பது தெரிகிறது. என்னுடைய முதல் படமான உரிமை கீதம் படத்தில் இருந்து எனக்கும் மயில்சாமிக்கும் 35 வருட கால நட்பு உண்டு. 1993ல் டிவி சேனல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து வருடத்திற்கு நான்கு நிதி நிறுவனங்களாவது விளம்பரங்கள் மூலம் மக்களை கவர்ந்து வந்தன. வருடந்தோறும் ஏதாவது ஒரு நிதி நிறுவனம் மக்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. விளம்பரங்களை நம்புவதை விட அதை ஆராய்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று கூறினார்.

இயக்குனர் A.ராகுல் பேசும்போது,

“இந்த படத்தை ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸ் ஆக உருவாக்குவதற்கு தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இந்த முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த இரண்டாவது நாளில் மயில்சாமி இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார். இதைத்தொடர்ந்து எவ்வாறு இந்த படத்தை முன்னெடுத்துச் செல்வது என்கிற தயக்கத்திலேயே சில நாட்கள் இருந்தோம். எடுத்தவரை இதை மட்டுமே ஒரு குறும்படமாக வெளியிடலாம், மக்கள் முன் கொண்டுபோய் சேர்த்து விடலாம் என தயாரிப்பாளராக என் தந்தை ஆலோசனை கூறினார்.

அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இதை குறும்படமாக மாற்றினோம். மயில்சாமி சாரிடம் இந்த கதையை கூறியபோது அவர் என்னிடம், எல்லோரும் எனக்கு பெரும்பாலும் ஒரே விதமான கதாபாத்திரங்களையே கொடுத்து நடிக்க வைக்கின்றனர். இதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய பண்ண வேண்டும்.. நிச்சயமாக நாம் இருவரும் இணைந்து ஜெயிப்போம் என்று சொன்னார்.. அவர் சொன்னது போல ஜெயித்து விட்டோம்” என்று கூறினார்.

நடிகர்கள்

மயில்சாமி, ரேகா நாயர், சுகைல், இப்ராஹீம்,ராம் மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு ; அசோக்குமார்

இயக்குனர் ; A.ராகுல்

இசை ; கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு ; அசோகர்

படத்தொகுப்பு ; இம்ரான்.S

கலை ; பிரதீப்

மக்கள் தொடர்பு ; M.P.ஆனந்த்