வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

0
288

வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

சென்னை, போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்.

வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று முன்தினம் மாஸாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ,மேக்கிங் வீடியோவில் அஜித் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வாங்கியிருந்தார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலிமை படத்தின் திரையரங்கு உரிமை விற்பனையாகிவிட்டது . இந்நிலையில் வெளிநாடுகளுக்கான விற்பனை தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்துப் பார்த்தால் தமிழ் படங்கள் அதிகம் வசூல் செய்வது வடஅமெரிக்கா (யுஎஸ்), ஆஸ்திரேலியா. இந்த இருநாடுகளின் வலிமை திரையரங்கு விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது. இதனை அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடும் போட்டிக்கு நடுவில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது.அத்துடன் பிரான்ஸ் நாட்டின் விநியோக உரிமையையும் இந்நிறுவனமே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.