லேபர் திரை விமர்சனம்: லேபர் கட்டிட தொழிலாளர்களின் அவல நிலையையும், கடின உழைப்பையும் பறை சாற்றும் படம்

0
255

லேபர் திரை விமர்சனம்: லேபர் கட்டிட தொழிலாளர்களின் அவல நிலையையும், கடின உழைப்பையும் பறை சாற்றும் படம்

ராயல் ஃபார்சூனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சத்தியபதி எழுதி இயக்கியிருக்கும் படம் லேபர்.
இதில் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-நிஜில்தினகரன், படத்தொகுப்பு-சி.கணேஷ்குமார், ஒலிகலவை-கிருஷ்ணமூர்த்தி, பிஆர்ஒ-ஆறுமுகம்.

கட்டிட மேஸ்திரியாக வேலை செய்யும் முத்து இறுதியாண்டில் இன்ஜீனியருக்கு படிக்கும் மகனின் கல்லூரி கட்டணத்தை கட்ட எல்லோரிடமும் அலைந்து திரிந்து பணத்தை கடனுக்கு வாங்கி படிக்க வைக்கிறார். அவரின் ஒரே கனவு தன் மகன் தன்னைப்போல் கஷ்டப்படாமல் படிப்பை முடித்து கட்டிட இன்ஜினீயராக ஆக வேண்டும் என்பதே. முத்துவின் கீழ் சித்தாளாக சரண்யா, முருகன், திருநங்கை ஜீவா ஆகியோர் வேலை செய்கிறார்கள். சரண்யாவும் முருகனும் தம்பதியர் அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. போதிய வருமானம் இல்லாத நிலையில் முருகன் எப்பொழுதுமே இரவு நேரத்தில் குடித்துவிட்டு வருவதால்  சரண்யா சண்டை போடுகிறார். திருநங்கை ஜீவா தனியாக நின்று போராடி பல அவமானங்களை தாங்கிக்கொண்டு கட்டிட வேலை செய்கிறார். இவர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் இருக்கும் மோசடி தம்பதிகளிடம் சீட்டு கட்டுகின்றனர். அவர்கள் சீட்டுப் பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற போலீசிடம் அனைவரும் சேர்ந்து புகார் அளிக்க தம்பதிகளை போலீஸ் கைது செய்கிறது. அதே சமயம் முருகன் வேலை செய்யும் போது அடிபட்டு மருத்துவமனையில் இறந்து விடுகிறார். சரண்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புக்கு பின் என்ன முடிவு செய்தார்? கட்டிட தொழிலாளர்களின் சீட்டு பணம் என்னானது? அவர்களின் பரிதாப நிலை என்ன?  என்பதே படத்தின் மீதிக்கதை.

முத்து, சரண்யா ரவிச்சந்திரன், திருநங்கை ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம் ஆகியோர் இயல்பாகவும் கதைக்களத்கேற்ற பங்களிப்பை சிறப்பாக கொடுத்து அச்சு அசல் கட்டிட தொழிலாளர்களாகவே நடித்திருக்கிறார்கள்.

இசை-நிஜில்தினகரன், படத்தொகுப்பு-சி.கணேஷ்குமார் ஆகிய இருவரும் படத்தின் இன்றியமையாத காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.

கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகள், கடின உழைப்புகள்,  வேலை செய்யும் போது ஏற்படும் ஏச்சு பேச்சுக்கள்,போராட்டங்கள், ஏமாற்றங்கள் என்று அவர்களைச் சுற்றியே திரைக்கதையமைத்து புதிய முயற்சியில் பட்ஜெட்கேற்ற படமாக முதல் பாதியில் மெதுவாக செல்ல இடைவேளைக்குப்பிறகு வேறு கோணத்தில் வித்தியாசமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சத்தியபதி.

மொத்தத்தில் லேபர் கட்டிட தொழிலாளர்களின் அவல நிலையையும், கடின உழைப்பையும் பறை சாற்றும் படம்.