லத்தி – விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படம்!

0
65

லத்தி – விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படம்!

தென்னிந்திய மொழிகளுடன், இந்தி மொழியிலும் வெளியாகும் பான் – இந்தியா திரைப்படங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரே கதை, அதே நடிகர்கள். ஆனால், படம் பலமொழிகளில் வெளியாகும். இதனால் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் பிற மொழிகளின் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையில் கணிசமான கோடிகளை சம்பாதிக்க முடியும். விஷாலின் முதல் பான் – இந்தியா திரைப்படமாக லத்தி உருவாகிறது.

விஷால் ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடிக்கிறார். அந்தப் படங்கள் ஓடுவதுமில்லை. தொடர்ச்சியாக தோல்விகள். எனினும் ஆக்ஷனை மட்டும் அவர் கைவிடுவதாயில்லை. தீபாவளிக்கு வெளியாக உள்ள எனிமி படமும் ஆக்ஷன் திரைப்படமே. ஆர்யா இதில் வில்லனாக நடித்திருக்க, அரிமா நம்பி, இரு முகன் படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

இதையடுத்து விஷால் நடித்துவரும் படம், வீரமே வாகை சூடும். இதுவும் ஆக்ஷன் படம்தான். இது தயாரிப்பில் இருக்கையில் விஷால், வினோத் குமார் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு படப்பிடிப்பும் தொடங்கியது. இந்தப் படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தாவும், ரமணாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ரமணாவின் RA, நந்தாவின் NA இந்த நான்கு எழுத்தையும் சேர்த்து, RANA என்று தங்களின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் பெயரை அறிவித்துள்ளனர். இதற்கு லத்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது போலீஸ் கதையாக இருக்க வாய்ப்புள்ளது.

லத்தியை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளனர். இத்தனை மொழிகளில் வெளியாகும் விஷாலின் முதல் படம் இது. சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.