ரூ 200 கோடிக்கு மேல் போலி விலைப்பட்டியல்களை வழங்கி ரூ 31.85 கோடி உள்ளீட்டு வரிக் கடனை மோசடியாக பெற்றதற்காக இருவரைக் கைது செய்தது ஃபரிதாபாத் சிஜிஎஸ்டி ஆணையரகம்
புதுதில்லி, பிப்ரவரி 24, 2022
இரும்புக் கழிவுகளை வர்த்தகம் செய்வதாக ஐந்து போலி நிறுவனங்களின் பெயரில் பில்லிங் மோசடியை நடத்தியதற்காக ஃபரிதாபாத்தில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகம் 23.02.2022 அன்று இருவரைக் கைது செய்தது.
ரூ 200 கோடி ரூபாய்க்கு மேல் போலி விலைப்பட்டியல்களை வழங்கியதற்காகவும், உண்மையான சரக்குகளை வழங்காமல், மோசடியாக ரூ 31.85 கோடி உள்ளீட்டு வரிக் கடன் பெற்றதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஃபரிதாபாத்தில் உள்ள 5 இடங்களில் மோசடித் தடுப்பு அதிகாரிகளின் குழு 2022 பிப்ரவரி 22 அன்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. மேற்கூறிய நிறுவனங்கள் மோசடியாக உள்ளீட்டு வரிக் கடனைப் பெற்று வருவது விசாரணையின் போது கண்டறியப்பட்டது. சரக்குகளின் உண்மையாக வழங்காமல் போலி விலைப்பட்டியல்கள் மூலம் இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.
சிஜிஎஸ்டி சட்டம் 2017-ன் 132-ம் பிரிவின் படி, சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கப்படாமல் விலைப்பட்டியல் அல்லது ரசீது வழங்குதல் மற்றும் உள்ளீட்டு வரிக் கடனை தவறாகப் பயன்படுத்துதல் (மதிப்பு ரூ 5 கோடிக்கு அதிகமாக இருப்பின்) பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும்.
மேற்கண்ட வழக்குத் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.