ராகவா லாரன்ஸ் – அக்‌ஷய்குமார் படத்தின் டைட்டில் மாற்றம்

0
192

ராகவா லாரன்ஸ் – அக்‌ஷய்குமார் படத்தின் டைட்டில் மாற்றம்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும், ஹீரோயினாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் தற்போது ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப் படத்தை ராகவா லாரன்ஸே இயக்கியுள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்தே ஊரடங்கு அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 9-ம் தேதி அன்று ‘லட்சுமி பாம்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு ‘லட்சுமி பாம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும், எனவே பெயரை மாற்றக் கோரியும் இந்து அமைப்புகள் குரல் எழுப்பின.

எதிர்ப்புக் குரல் எழுந்ததை அடுத்து ‘லட்சுமி பாம்’ என்ற படத்தின் டைட்டிலை ‘லட்சுமி’ என்று படக்குழு மாற்றியிருக்கிறது. ராகவா லாரன்ஸ் – அக்‌ஷய்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் பாலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.