முதலமைச்சருக்கு நடிகர் விவேக் மனைவி கோரிக்கை
திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி 2021ம் ஆண்டு திடீரென்று இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் தனது முற்போக்கு சிந்தனையால் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் நடித்துக் காட்டியவர். இதனால் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். நடிகர் விவேக் இறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்கிறது.
சமீபத்தில் அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை விவேக்கிடம் மேலாளராக பணியாற்றிய செல் முருகன் மற்றும் விவேக் பசுமை கலாம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. தலைமை நிலையப் பொறுப்பாளரும், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவருமான பூச்சி முருகன், முதல்-அமைச்சரிடம் சென்னையில் ஒரு தெருவுக்கு விவேக் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உரிய முறையில் கடிதம் கொடுத்தால் நிச்சயமாக செய்யலாம் என்று முதலைமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதற்கான கடித்தை தயார் செய்யுங்கள் என்று கூறியதாக அவர் பேசினார்.
இந்நிலையில் விவேக் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த தெருவில் உள்ள சாலைக்கு நடிகர் விவேக் பெயரை வைக்க வேண்டும் என விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக நடிகர் விவேக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.