மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமித்த அஜித்தின் ‘வாலி’ திரைப்படம்!

0
120

மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமித்த அஜித்தின் ‘வாலி’ திரைப்படம்!

டிஜிட்டலாக தமிழகமெங்கும் வெளியான “வாலி” திரைப்படம்

நந்தினி தேவி பிலிம்ஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் மீண்டும் வெளியான “வாலி” திரைப்படம் !!

நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில், நடிகர் அஜித் குமார், சிம்ரன் நடிப்பில், இயக்குநர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “வாலி” திரைப்படம், மீண்டும் தற்போது டிஜிட்டலாக தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. நந்தினி தேவி பிலிம்ஸ் சார்பில் K கிருஷ்ணன் “வாலி” திரைப்படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான வாலி திரைப்படம், இயக்குநர் எஸ் ஜே சூர்யாவிற்கும், அஜித்திற்கும் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படமாகும். எஸ் ஜே சூர்யாவை ஒரு இயக்குநராகத் திரையுலகில் நிலை நிறுத்திய இப்படம் வெளியான போது, விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டுகளைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

ஒரு சிக்கலான கதையை, மிகச் சிறப்பான திரைக்கதையாக மாற்றி, ஒரு அட்டகாசமான திரில்லர் படத்தைத் தந்திருந்தார் எஸ் ஜே சூர்யா. நடிகர் அஜித் இரு வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், பேச முடியாத அண்ணன் பாத்திரத்தை அத்தனை அட்டகாசமாகத் திரையில் உயிர்ப்பித்திருந்தார். அவர் நடிப்புக்கு இன்று வரை பெயர் சொல்லும் படமாக , அவருக்கான நடிப்பின் மகுடமாகத் திகழ்கிறது. நடிகை சிம்ரன் உட்பட, படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும், மிக முக்கியமான திரைப்படமாக இப்படம் அமைந்தது.

இப்படத்தில் பின்னணி இசையும் பாடல்களும், இன்று வரையிலும் மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணமாக, அற்புதமான இசையை தந்திருந்தார் இசையமைப்பாளர் தேவா.

தற்போது 24 வருடங்களுக்குப் பிறகு, தற்கால ரசிகர்களுக்காக முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு, 5.1 சவுண்ட் சிஸ்டத்துடன் வெளியாகி உள்ளது. நந்தினி தேவி பிலிம்ஸ் சார்பில் K கிருஷ்ணன் காளியப்பன் “வாலி” திரைப்படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கமலா, காசி, ரோகிணி, பிவிஆர் காம்ப்ளக்ஸ், ஏஜிஎஸ் காம்ப்ளக்ஸ், வெற்றி உட்பட பல திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, திருச்சி என, தமிழகமெங்கும் ஒவ்வொரு ஊராக இப்படம் வெளியாகி வருகிறது.

24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு ஒரு புதிய திரைப்படத்திற்கு இணையாக மிகப்பெரிய வரவேற்பு, மீண்டும் கிடைத்து வருகிறது. மேலும் சமீப காலமாக நடிகர் அஜித்தைத் திரையில் சந்திக்காத ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்துள்ளது.