மீண்டும் இணையும் ரஜினி – சிவா கூட்டணி?
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, ஜெகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டப் பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். படம் இரண்டே நாளில் 100 கோடி ரூபாய்க்குமேல் வசூலைக் கடந்தது. வடகிழக்கு பருவமழை சூழலிலும் ‘அண்ணாத்த’ படத்தை குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக மக்கள் தியேட்டருக்குச் சென்று ரசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ’அண்ணாத்த’ வெளியாகி ஓடிக்கொண்டிருப்பது குறித்து ரஜினி என்ன சொன்னார் என்பதை இயக்குநர் சிறுத்தை சிவா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், “படம் வெளியானபிறகு ரஜினி என்ன சொன்னார்?” என்று கேட்டதற்கு ”அண்ணாத்த ப்ளாக் ஃபஸ்டர் ஹிட் என்பதால் அடிக்கடி ரஜினி சாரிடம் பேசுகிறேன். ஒவ்வொரு முறையும் ரஜினி சாரிடம் போனில் பேசும்போது சந்தோஷத்துடன் ”சிவா சார்… படம் பெரிய சக்சஸ்ங்கிறாங்க சிவா சார்…. நாம ஜெயிச்சிட்டோம் சிவா சார்” என்பார். அவர், அப்படி பேசுவதை கேட்பதற்கே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார் சிவா.

இந்நிலையில் மீண்டும் சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ரஜினி நடிக்கும் புதிய படத்தை அவரது மகள் சவுந்தர்யா தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தை இயக்குவதற்கு சிவா பெயரை ரஜினியிடம் அவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது விஜய் அல்லது சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க சிவா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த படத்தை விரைவாக முடித்து விட்டு ரஜினி படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா ஏற்கனவே அஜித்குமார் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், கார்த்தி நடித்த சிறுத்தை ஆகிய படங்களை இயக்கி உள்ளார். சில தெலுங்கு படங்களையும் டைரக்டு செய்துள்ளார்.