மாஸ் காட்டும் வலிமை டிரைலர்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவதையொட்டி தற்போது படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக நடித்துள்ள அஜித், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப்பிறகு இளமையாகவும் ஃபிட்டாகவும் கவனம் ஈர்க்கிறார். அஜித் ’கியர்’ரைப் பிடித்து பைக்கில் பறக்கும் காட்சிகளுடன் தொடங்கும் ட்ரெய்லர் இறுதிவரை ’ஃபயர்’ராய் சாகசங்களுடனேயே நிறைவடைகிறது. மிரட்டலுடன் இருக்கும் பைக் சேஸிங் காட்சிகளே ‘வலிமை’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கே புதிய பேரனுபவத்தை கொடுக்கும் என்பதை உணர்த்துகிறது. அதேசமயம், இயக்குநர் ஹெச்.வினோத்தின் உழைப்பும் மெனக்கெடல்களையும் கண்முன் நிறுத்துகிறது.
‘ஏழையா இருந்து உழைச்சி சாப்பிடுற எல்லோரையும் கேவலப்படுத்தாத’… ‘வலிமை என்பது அடுத்தவனை காப்பாத்தத்தான் அழிக்க இல்ல’ போன்ற பல வசனங்கள் இருந்தாலும் குறிப்பாக கவனம் ஈர்ப்பது, அஜித்துடன் இருக்கும் காவலர், ‘இவங்களை என்கவுன்ட்டர்ல தூக்கிட்டிருக்கணும் சார்’ என்று சொல்ல ”உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்ல” என்று பதிலடிக் கொடுத்து மனித உரிமையை மதிக்கும் காவல்துறை அதிகாரியாக மதிப்பை ஏற்படுத்துகிறார் அஜித். ’குற்றவாளிகள் எவ்வளவு கொடூரமான தவறே செய்திருந்தாலும் சட்டத்தின்படிதான் தண்டனை வழங்க வேண்டும்’ என்கிறார், அழுத்தமாக. ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று பெருமையடித்துக்கொள்ளும் காவல்துறையினரின் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், ”உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்ல” என்று சொல்லும் அஜித்தின் குரல்தான் நம் காதுகளில் ‘வலிமையாய்’ ஒலித்துக்கொண்டிருக்கிறது. காவல்துறையினருக்கும் நிச்சயம் ஒலிக்கும்; ஒலித்துக்கொண்டே இருக்கும்.