மதுரையில் ‘விருமன்’ இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா! – முழு விபரம்!!
2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ரசிகர்கள் முன்பு நடந்தது. விழாவிற்கு வருகைப் புரிந்த அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது :
#விருமன் பட விழாவில்..
உங்களை 5 மணியிலிருந்து கட்டி வைத்திருந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமானவர்கள் பேச வேண்டியிருந்ததால் உங்களை அமைதியாக இருக்க சொன்னேன். ஆனால், இப்பொழுது உங்களுடைய முழு அன்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இது இன்று நேற்று உறவல்ல; 25 கால உறவுகள்! அதில் போட்ட ஒரு சில பேரை நான் நான் கூற முடியும். மற்றவர்கள் தவறாக நினைக்கக் கூடாது. ஜோதிமுத்து, மனோஜ் போன்ற அனைவரும் 25 ஆண்டுகாலமாக இந்த உறவை கட்டிக் காப்பாற்றி இருப்பதை வார்த்தைகள் கூறி விட முடியாது. இந்த அன்பிற்கும் உறவிற்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ராஜாவுடைய சொந்த ஊர் இதுதான். பள்ளிக்காலத்தில் கோயம்புத்தூருக்கு விடுமுறையில் செல்வது போல இங்கும் வந்திருக்கிறேன். அப்போது நான் நடிகன் கிடையாது. ஆனால், சித்தி பையன், பெரியம்மா பையன், மாமா பையன் என்று ராஜாவுக்குத் கொடுக்கும் அதே உறவை, எனக்கும் கொடுத்தார்கள். அதை நான் ஆச்சரியம் உடன் பார்த்திருக்கிறேன். எதையும் எதிர்பாராமல் அவர்கள் கொடுக்கும் அன்பு, சாப்பாடு, பல நாட்கள் இங்கு சுற்றியது என்னால் மறக்கவே முடியாது. அவையும் அதற்கு இணையான அனுபவம் இங்கும் இருக்கிறது.
தென் தமிழ்நாட்டின் வாசல் மதுரை. மதுரை என்றாலே அழகர், வாடிவாசல், மீனாட்சி அம்மன் என்று கூறுவது போல, அச்சு அசலாக மக்களின் அன்பு கிடைப்பது எங்களுக்கு ஒரு வரம். அந்த வரத்தை அளித்த அனைவருக்கும் நன்றி.
மதுரையில் பல கதைகள் இருக்கிறது. கற்பனை கதையல்ல, நிஜத்தில் நடந்த கதையை சுவாரசியமாக கூறுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்த இயக்குனர் இமயம் ஆக முடியும் என்று பாரதிராஜா அங்கிள் எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் நமக்கு மிகப்பெரிய அடையாளம். அது மட்டுமே அவருடைய சாதனை அல்ல. அவரைப் போன்று கிராமத்திலிருந்து வந்த ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையாக இருந்திருக்கிறார். அவர்களுக்கு கை கொடுத்து உயர்த்தியிருக்கிறார். இன்னும் பலருக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் வீட்டில் விளையாடுவதற்கும், அவர் பையன் மனோஜ் உடன் விளையாடுவதற்கும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் அழைத்ததற்காக இங்கு வந்திருக்கிறார். அதை நான் மிகவும் உயர்வாக பார்க்கிறேன். எந்த விஷயமாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று கூறுவார். அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும்.
ஆயுத எழுத்து படத்தில் நான் உங்களுக்கு நடிக்க சொல்லித் தரவில்லை. என்னை நிறைய புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள். ஸ்கிரீன் டெஸ்ட் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் என்னை நடிக்க வைக்கவில்லை. உங்களுடைய வெளிச்சத்திலிருந்து தான் நான் வந்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஆலமரம். உங்களுடைய ஆசீர்வாதம் தான் உங்களை வழிநடத்துகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளத்தைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், நான் எந்த வட்டத்திற்குள்ளும் மாட்ட மாட்டேன் என்று தன்னுடைய உயரம், புகழ், பெயரை மீண்டும் மீண்டும் மறுவரையறைப் படுத்திக் கொண்டே இருப்பவர் ஷங்கர் சார் தான். அப்போதே பான் இந்தியா படத்தை கொண்டு வந்தவர் இவர். 30 வருட காலமாக தொடர்ந்து சாதனைப் புரிவது சாதாரணமானது அல்ல. இப்பொழுது இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
அதிதி நீ ஜொலிக்கிறாய். நம்மை சுற்றியுள்ள உலகத்தை நாம் தான் உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. நீங்கள் உங்களைச் சுற்றி அழகான உலகத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். 2D அலுவலகத்திற்கு நீங்கள் வந்த நாள் முதல் அனைவருக்குமே உங்களைப் பிடித்து விட்டது. அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தீர்கள். உங்களை தண்ணீர் குடிக்கிறீர்களா? சாப்பிட்டீங்களா? என்று அனைவரையும் கேட்க வைத்தீர்கள். நீங்கள் ஒரு ஆற்றலின் மூட்டை. உங்கள் வரவு நல்வரவாகுக! உங்களுக்கான மரியாதையை இந்த சினிமா உலகம் கொடுக்கும். எங்கள் குடும்பம் சார்பாக உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறோம். அப்பா அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இந்த துறையில் உங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது.
காவல் கோட்டம், வேல்பாரி நம் தமிழர்களுடைய முக்கியமான அடையாளம். எல்லோரிடமும் எடுத்துச் சென்ற மிகச்சிறந்த படைப்பு. நண்பன் என்று கூறுவதா அல்லது ஒரு என்று கூறுவதா தெரியவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்கள் இங்கு வந்தது எங்களுக்கு கூடுதல் மதிப்பு. மதுரை மக்களின் குரல், தமிழ் மக்களின் குரல் எங்கு, எப்போது, எப்படி பதிவு செய்ய வேண்டுமோ! அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவருடன் சுவாரவசியமான பயணத்தை ஆரம்பித்துவிட்டோம். அது முக்கியமான பதிவாக இருக்கும். அது என்னவென்று இன்னொரு மேடையில் கூடிய விரைவில் கூறுகிறேன்.
பாரதிராஜா அங்கிள்,
கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை போன்ற பல படங்களில் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார். நம் முன்னாடி இருக்கும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள், அதை நாம் சந்திக்கும் விதங்கள் இவற்றை நாம் அனுபவத்தில் வாழ்ந்து இக்கட்டான சூழ்நிலையில் கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், ஒரு நல்ல படம் பார்க்கும்போது இப்படித்தான் வாழவேண்டும், உறவுகளே இப்படி தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய ஒவ்வொரு படங்களிலும் பதிவு செய்திருக்கிறார். தேவன் என்பது என்ன பட்டமா? என்று அனைவரையும் உலுக்கிப் போட்ட ஒரு கேள்வி, அதேபோல இப்படத்தில் இறுதி காட்சியில் வசனங்கள் இருக்கிறது. முத்தையாவின் வசனங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தை எடுத்தோம். அந்த வசனங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும். உங்களுக்கு ஒழுக்கம் எங்கிருந்து வந்ததென்று இப்போதுதான் தெரிகிறது. நீங்கள் டீ காப்பி கூட குடிக்க மாட்டீர்கள் என்று அலுவலகத்தில் கூறினார்கள். அதற்கான காரணத்தை இப்போது உங்கள் அப்பா அம்மா கூறிய பிறகுதான் அதை ஏன் பின்பற்றுகிறீர்கள் என்று தெரிந்தது. அதைக் கேட்ட பிறகு உங்கள் மீதான மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.
பாலா மற்றும் அமீரின் பெயரைக் கூறாமல் இந்த மேடையை விட்டு இறங்க முடியாது. எனக்கும் கார்த்திக்கும் அவர்களால் தான் அடையாளம் கிடைத்திருக்கிறது.
இந்த ஊரை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார் செல்வா. இயக்குனருடன் சேர்ந்து கதை கூறும் முக்கியமான பொறுப்பு அவருக்கு இருந்திருக்கிறது. ஜாக்கி ஒரு நாடோடி. ஒரு படம் முடிந்ததும் பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விடுவார். பைக் பயணத்தில் அலாதி பிரியம் கொண்டவர். மிகச் சிறந்த பாடகரும் கூட. எங்கள் இருவரிடமும் அவருடைய பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்போது வாடிவாசல்- இல் பயணிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். வையாபுரி அண்ணனுக்கு நன்றி. பிதாமகன் படத்தில் பாதி நடிப்பை சொல்லிக் கொடுத்தது சிங்கம்புலி அவர்கள்தான். பேரழகன் படத்திலும் சின்னாவாக நடிக்க முடிந்ததற்கு சிங்கம்புலி அண்ணா தான் காரணம். அவரைப் பார்த்துதான் சின்னாவாக நடிக்க கற்றுக் கொண்டேன்.
இளவரசு அண்ணனுடன் என் ஜி கே வில் பயணித்தது மறக்க முடியாதது. கெட்டப்பில் மீசை தாடி மாற்றாமல் அப்படியே தான் இருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார்.
எங்கள் 2D நிறுவனம் உங்களை எப்படி நடத்தியது என்று நீங்கள் வேறு ஒருவருக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை நான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் திருப்தியான, நெகிழ்வான தருணமாக இருந்தது. அதற்காக வடிவுக்கரசி அம்மாவிற்கு நன்றி.
அனல் அரசின் சண்டைக் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. சுந்தர் அருமையாக நடித்திருக்கிறார். டப்பிங்-லும் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றக் கூடிய வல்லமை சூரிக்கு இருக்கிறது. தனக்குள் இருக்கும் திறமை முழுவதையும் கொடுத்துவிடுவார். இப்படத்திலும் அதை பார்க்க முடிந்தது. வெற்றிமாறனின் இயக்கத்தில் அவர் நடிக்கும் விடுதலை படத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கருணாஸ் மாமாவிற்கு நன்றி.
இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் கொரோனா காலக்கட்டத்தில் நடந்தது. படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் கொடுக்காமல் அந்த ஊர் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மதுரை மக்களுக்கும் தேனி மக்களுக்கும் மிக்க நன்றி.
சரியாக நடிக்க தெரியாத போது, சென்னோரீட்டா பாடலில் என்னை ஓட விட்டவர் யுவன். சகோதரன் மாதிரி தான் நாங்கள் பழகி வருகிறோம். பருத்திவீரன் படத்தில் கதையே இசையும் பிரிக்க முடியாத அளவிற்கு கதையோடு இணைந்து இசையமைத்திருந்தார் யுவன். அவருடைய பயணம் இன்னும் தொடர வேண்டும்.
ரசிகர்களாகிய உங்களால் கமல் சார் எனக்கு கொடுத்த பரிசு இதோ இந்த ரோலக்ஸ் வாட்ச்.
கார்த்திக்கு முன்பே நான் நடிக்க வந்து இருந்தாலும், என்னை விட அதிகமாக சினிமாவைப் பற்றி பேசுவதும், செயல்படுவதும் கார்த்தி தான் என்று வெளிப்படையாக எந்த மேடையிலும் கூறுவேன். சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி. யுவன் கார்த்தி இருவருமே என்னுடைய தம்பிகள். அவர்கள் இருவரும் சினிமாவிற்கு செய்த பதிவை யாராலும் மறக்க முடியாது. என்னை விட பல மடங்கு அவர்களை கொண்டாடுவார்கள். பல விருதுகளை பெறுவார்கள்.
என் மகளுடைய படிப்பிற்காக 40 நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன். அப்போது தேசிய விருது கிடைத்ததை நான் தெரித்துக் கொள்ள மூன்று மணி நேரம் ஆனது. அதற்குள்ளேயே நீங்கள் கொண்டாடினீர்கள். அதை உங்களுடைய விருதாக பார்த்தீர்கள். கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடக்கூடிய ஊர் மதுரை. இந்த ஊரில் உங்கள் முன்பு விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடுவதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். எப்போதும் உங்களுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும்.
டெல்லியும் ரோலெக்ஸும் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் பேசும்போது,
என் சொந்த ஊர் மதுரை தான் சிவகங்கை மாவட்டம். விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் வைக்க வேண்டும் என்று கார்த்தி சார் கூறியதும் மகிழ்ச்சியாக இருந்தது. நம்ம ஊரில் அதுவும் நம்ம ஊர் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இசைவெளியீட்டு விழா தான் இயக்குனர் முத்தையாவின் முதல் திரைப்பட விழா. அவருக்கு எவ்வளவு சந்தோஷமான தருணமோ எங்களுக்கு இது உணர்ச்சிகரமான தருணம். இவ்விழாவிற்கு வருகைத் தந்திருக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மதுரை ரசிகர்கள் அனைவரையும் 2டி சார்பாக வரவேற்கிறோம். இந்த விழாவை சிறப்பாக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது,
இது மதுரை மண். என் சொந்த மண். ரசனைக்குப் பெயர் போன மண். மதுரையில் ஒரு படம் ரசிக்கப்படுகிறது என்றால், உலகம் முழுவதும் ரசிக்கப்படும் என்று அர்த்தம். என் பெருமைக்குரிய இடம் மதுரை. மேடையில், நான் சம்பிரதாயத்திற்குத்தான் பேசுவேன். ஆனால், சில படங்கள் தான் மூச்சுமுட்ட அமுக்கி விடும். அதுமாதிரியான படம் தான் விருமன். இந்த படத்தின் சிறப்பம்சங்கள் நிறைய இருக்கிறது. இவர்கள் 4வது தலைமுறை பிள்ளைகள். சூர்யா, கார்த்தி என் வீட்டில் விளையாடிய பிள்ளைகள். இன்று அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. உதவி இயக்குனராக இருந்தபோது, சிவக்குமார் திருமணமாகி வந்தார். அவருடைய பிள்ளைகள் இப்படி வருவார்கள் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஒழுக்கமுள்ள சிறந்த மனிதர் சிவகுமார். ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தவர் சிவகுமார். வசதியாக இருந்தாலும், பள்ளிக்கு கார் கொடுத்து அனுப்ப மாட்டார்.
ஷங்கரைப் பார்த்து பிரமித்தவன் நான். ஷங்கருக்கு முன்பே இயக்குனராகிவிட்டேன். ஆனால், ஷங்கர் வந்தபோது பயந்தேன். நான் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருந்துவிட்டேன். சினிமாவை ஷங்கர் உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்று விட்டார். அவருடைய பெண் மருத்துவம் படித்திருக்கிறார். அவர் மகள் நடிக்கிறாரா? என்று ஆச்சரித்துடன் கேட்டேன். சிறப்பாக நடனமாடியிருக்கிறார். வருங்காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம் வருவார். தமிழ்நாட்டின் ஏஞ்சல் என்று போற்றப்படுவார். ஆனால், முகத்திற்குள் நடிகையைக் கொண்டு வந்திருக்கிறார். ஷங்கர் பெண் என்பதற்காக கூறவில்லை, அழகு இருந்தால் லட்சணம் இருக்காது, லட்சணம் இருந்தால் அழகு இருக்காது. ஆனால், அழகும் லட்சணமும் சேர்ந்து இருக்கிறார். இவை இருந்தாலே உயரத்திற்குச் சென்று விடுவார்.
நான் பார்த்து வளர்ந்த பையன் கார்த்தி. அவனுடைய நடனம் மெய்சிலிர்க்க வைத்தது. மிகச் சிறந்த நடிகன். அவன் கண் பேசகிறது, முகம் பேசுகிறது, முடி பேசுகிறது. பருத்தி வீரன் பார்த்தேன். ஷாக் ஆனேன்.
கார்த்திக் கூடிய விரைவில் தேசிய விருது வாங்குவார்.
சூர்யாவுடன் ஆயுத எழுத்து படத்தில் நடித்தேன். அதில் ஒரு காட்சியில் நடித்து முடித்ததும், Uncle super, keep it up like this என்று கூறினார். நான் எத்தனை பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால், சூர்யாவிடமிருந்து இதைக் கேட்ட பின்பு நான் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று பயந்தேன்.
சினிமாத் துறையில் நிறைய தொந்தரவு கொடுத்தார்கள். ஆனால், ஜெய்பீம் என்று வந்து நின்றான். எது நடந்தாலும் நான் உன் பின்னால் இருக்கிறேன் என்று கூறினேன். அவர்கள் மிகப்பெரிய சொத்து. உங்களுக்கு தான் அவர்கள் நடிகர்கள். ஆனால், அதற்கும் மேல் சம்பாதித்ததை வைத்தே அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகிறான். சம்பாதிக்கும் தன்மை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், கொடுக்கும் மனப்பான்மை மனிதனுக்கு வர வேண்டும் அது இவர்களுக்கு இருக்கிறது.
சிவகுமார் ஒழுக்கமானவர். அவர் குடும்பம் சிறந்த குடும்பம். இது மாதிரி பிள்ளைகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த காலத்தில் சேரன், சோழன், பாண்டியர்கள் இமயம் சென்று வென்று வருவார்கள். ஆனால், சூர்யா பம்பாய் சென்று வென்று வந்திருக்கிறார். சூர்யா கிடைக்க ஜோதிகா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இங்கு பேசிய வடிவுக்கரசி, இளவரசு போன்ற பலரை அறிமுகப்படுத்திய பெருமை இருந்தாலும், எனக்கு சூர்யா, கார்த்தி போல பிள்ளைகள் இல்லையென்ற வருத்தம் இருக்கிறது.
இந்த தங்கங்களை வைத்து படமெடுக்க ஆசை இருக்கிறது. தங்கம் சாதாரணமாக வராது. இருந்தாலும், அவர்கள் மெனக்கடும்படியான கதையை அடித்துக் கூறி எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றார்.
இயக்குனர் முத்தையா பேசும்போது,
எனக்கு மேடையில் பேச வராது, இன்று நடக்கும் இந்த விழாவின் மேடை மிக முக்கியமானது. கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் என எந்த படத்திற்கும் இது வரை இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு மட்டுமே நடந்துள்ளது.
இசை வெளியீட்டு விழா நடந்தால் எனது பெற்றோர்களை அழைத்து வர ஆசைப்பட்டேன். நாம் நேசித்த தொழிலில் வெற்றி பெறுவது என்பது சிறந்த விஷயம்.
அது தனி சந்தோஷமும் கூட.
அந்த சந்தோஷமான தருணத்தில் நம் பெற்றோரை அழைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரவேண்டும் என்று நினைத்தேன்.
அது இன்று நான் பிறந்த மண்ணில், நான் படித்த ஊரில் மிக பிரமாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சியில் அவர்களை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி.
பாரதிராஜா சார் அவர் தான் எப்போதுமே ஏகலைவன். நாமளும் படம் எடுக்கலாம். நாம் பார்த்த நம் மண்ணையும் மக்களையும் வைத்து படம் எடுக்கலாம் என்பதற்கு அவர் தான் எனக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவரின் முன்னிலையிலும்.
ஷங்கர் சாரின் முன்னிலையிலும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்பது மிக சந்தோஷமாக உள்ளது.
இவ்வளவு பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுத்த சூர்யா சாருக்கும், கார்த்தி சாருக்கும் ராஜா அண்ணனுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
சூர்யா சாருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். இந்த மேடையில் நான் இவ்வளவு சிறப்பாக இருப்பதற்கு காரணம் யுவன் சார். நிறைய சிறப்பான விஷயங்கள் என் படத்திலுள்ளன, அதிதி இப்படத்தில் அறிமுகம் ஆகிறார்கள். கார்த்தி சார் என்னிடம் நாம் இருவரும் இணைந்து இரண்டாவதாக ஒரு படம் பண்ணுவோம் என்றார்.
கார்த்தி சார் இது வரை மணிரத்னம் சாருடன் இணைந்து தான் 3 படம் நடித்துள்ளர். அதே போல் என்னுடன் இரண்டாவது படத்தில் இணைந்தது மிக சந்தோஷமாக உள்ளது.
என் தந்தை பெயர் முருகேசன், டீ கடை வைத்திருந்தார். காலை 2 மணிக்கு எழுந்திருப்பார். இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புவார். அப்பாவின் உழைப்பு போன்று வேறேதுவும் இல்லை. என் தந்தைக்கு படிப்பை விட ஒழுக்கம் தான் முக்கியம். அதை தான் நானும் பின் பற்றி வருகிறேன். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதனால்.
என் தாய் பழனி, அவர் ஏதும் அறியாத ஒரு சராசரி பெண். பழனி என்ற மூன்றெழுத்து பெயரை தவிர வேறு எதுவும் தெரியாத வெள்ளந்தியான கிராமத்துப் பெண் அவர். என் தந்தையை அவர் திருமணம் செய்யும் போது அவருக்கு 12 வயது. அப்பாவிற்கு 20 வயது. விவரம் தெரியாத அந்த வயதிலேயே ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்கள் 9 பெயரை வளர்த்தார். எங்களுக்கு கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான அனைத்தையும் டீ கடையில் உழைத்து எங்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் வளர்த்தார்கள்.
நாங்கள் ஒரு கூட்டுக் குடும்பமாக வளர்ந்ததால் தான் உறவு முறையான படங்களை இயக்குகிறேன். நகரத்தை பற்றி படம் எடுக்க பல இயக்குனர்கள் உள்ளனர். ஆனால், மண் சார்ந்து, மரபு சார்ந்து பண்பாடு சார்ந்து உறவு முறையை சொல்லக் கூடிய படங்கள் மிக குறைவாக தான் வெளியாகின்றன. 90க்கும் முந்தைய காலத்தில் அது போன்ற படங்கள் தான் அதிகமாக இருந்தது. அதனால் தான் தவறுகள் கொஞ்சம் குறைவாக இருந்தது என்று நான் நம்புகிறேன்.
உறவு முறைகளை பேசும்படியான படங்ககை இயக்க இயக்குனர்கள் முன் வரவேண்டும். ஒருவன் தவறு செய்வதே உறவுக்காக தான்.
நான் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையோடு தான் 550 கிலோமீட்டர் பயணித்து சென்னை வருவேன். அப்போது என் தந்தை “லட்சத்தில் ஒருவன் ஜெயிக்கும் தொழில் அது, உன்னால் எப்படி முடியும்” என்பார். ஆனால், எனக்குள் ஒரு வெறி மட்டும் இருந்தது. நம்பிக்கையோடு சென்றேன். மண் வாசனை, முதல் மரியாதை போன்ற படங்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கு பயமில்லை. அதே போல் இன்று ஜெயித்து என் பெற்றோரை அறிமுகம் செய்துவிட்டேன்.
94 காலகட்டத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தை நம்பி சினிமாவுக்கு வந்தேன். அதே போல், இசைக்கு இளையராஜாவை நம்பினேன். ஆனால், 96ல் யுவன் அறிமுகம் பின்பு யுவன் இசையில் ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டேன். இன்று தான் நடந்தது. குட்டிப்புலி படத்திற்கு யுவன் சார் ஒப்புக் கொள்ளவில்லை. கொம்பன் படத்திற்கு அவரிடம் போதிய காலம் இல்லை. இப்போது விருமன் படத்திற்க்கு கார்த்தி சாரிடம் கேட்டேன். அவரின் முயற்சியில் தான் யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய கார்த்தி சாருக்கு நன்றி.
கஞ்சாப்பூ கண்ணால பாடலை எழுதி கிட்டத்தட்ட 5 வருடங்களாகின்றன. அதற்கான அங்கீகாரம் இப்போது தான் கிடைத்துள்ளது. அதற்கு யுவனின் இசை தான் காரணம். பாடல்கள் அனைத்தையும் சிறப்பாக அமைத்துள்ளார்.
அதிதிக்கு நன்றி, அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. மரியாதையான பெண் அவர், அனைவருக்கும் மரியாதை கொடுத்தார். இப்படி மரியாதையான ஒரு பெண்ணை வளர்த்ததற்கு ஷங்கர் சாருக்கு நன்றி என்றார்.
42 வருடத்திற்குப் பிறகு இன்று தான் இங்கு வந்திருக்கிறேன். பாக்யராஜ் சார், ராஜேஷ் சார் மற்றும் நான் நடித்த “கன்னி பருவத்திலே” படத்தின் 50வது நாள் விழாவிற்காக இங்கு வந்தோம். அப்போதே சொன்னேன் மதுரைக்காரர்கள் மிகவும் பாசக்காரப் பிள்ளைகள் என்று. அதனால் அவர்களின் பாசத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. இப்போதிருக்கும் தலைமுறையினரின் பெற்றோர்கள் எங்களை ஆதரித்தார்கள். 42 வருடம் கழித்து இங்கு மீண்டும் வருகை தரும் இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த 2டி நிறுவனத்திற்கு நன்றி. 2டி நிறுவனம் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. அதுபோல, இயக்குனர் முத்தையாவும் எங்களைப் போன்ற பழைய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இதற்கு முன்னதாக கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் அதிகப்படியான கலைஞர்கள் நடித்திருந்தார்கள். நாம் மறந்து போன சிலருக்கு கூட ஒரு பாத்திரம் கொடுத்து நடிக்க செய்து மீண்டும் நினைவு படுத்தினார்கள். எங்களுக்கு நடிப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இப்போது அழைத்தாலும் விஜயகுமாரி அவர்கள் நடிக்க வருவார்கள் என்று முத்தையாவிடம் சொன்னேன். ஆகையால், எங்களுக்கு வேலை கொடுங்கள். இப்போதுள்ள புதிய தயாரிப்பாளர்களிடமும் இயக்குநர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்க எங்களுக்கு தெரியவில்லை. கேட்பதற்கு பயமாகவும் உள்ளது. ஆனால் எங்களை அழைத்து வாய்ப்பு கொடுத்த இவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
2டி நிறுவனத்திற்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இயக்குனர் முத்தையா போன்ற இயக்குனர்களுக்கு வருடத்திற்கு 2 படங்கள் 2டி நிறுவனம் கொடுக்க வேண்டும். அந்த இரண்டு படங்களிலும் எங்களைப் போன்றோர்களை அழைத்து வேலை கொடுங்கள். என்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்தப்படம் எனக்கு ஒரு கனவு போல் உள்ளது.
நாம் ஏதாவது நினைத்தால் அது உடனே நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம். இப்படத்தில் நடிப்பதற்கு ஒருவாரம் முன்பு தான் தம்பி கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையுள்ளது என்பதை ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தேன். அடுத்த வாரமே என்னை அழைத்து இப்பட வாய்ப்பைக் கொடுத்தார்கள். நான் யாரோ பேட்டியை பார்த்துவிட்டு விளையாடுகிறார்களோ என்று நினைத்தேன் ஆனால் அது நடந்தது. இப்படத்தில் நடித்திருக்கும் அதிதி முதல் ஷாட்டில் அவர் வசனம் பேசும் விதத்தை கண்டு நான் வியந்து நின்றேன். அப்போது தான் துணை இயக்குனர் செல்லப்பாண்டி சார் என்னிடம் நீங்கள் இந்தக் காட்சியில் மிகவும் கோபமாக நடிக்க வேண்டும் என்று கூறினார்.
என்ன மாமா சௌக்கியமா?
இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவில் இருந்து மீசை தாடி இல்லாமல் இப்படித்தான் வந்திருந்தேன். அப்பொழுது எப்படி இவரை பருத்தி வீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று அமீரிடம் கேட்டார்கள். அப்பொழுது, அமீர் சார் 10 பேரை அடிக்கும் அளவிற்கு தயாரானால் தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்றார். என்னைப் பருத்தி வீரனாக உருவாக்கி உங்கள் முன்னாள் நிறுத்தினார். இன்றுவரை தொடர்ந்து உங்கள் அன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் வேறு வேறு விஷயங்களைத் தேடிப் போவதற்கு நம்பிக்கை கொடுக்கிறது.
கிராமத்து படங்கள் எவ்வளவு முக்கியம் என்று எல்லோரும் சொன்னார்கள். கிராமத்தில் இருக்கும் காதல் வேறு. ஒரு பெண்ணைப் பார்த்தால் இறுதிவரை அந்தப் பெண்ணுடன் தான் வாழ வேண்டும். மாற்றிக் கொண்டே இருக்க மாட்டோம். அண்ணன், தங்கை, தம்பி என்று பல சொந்தங்கள் இருக்கின்றது. அவர்களுக்காக வாழ்வது தனி சுகம். அதை இங்கே கதை எடுத்தால் மட்டும் தான் சொல்ல முடிகிறது. கிராமத்து படங்களை நிறைய எடுக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு முத்தையா சார் மாதிரி ஆட்கள் தான் உந்துதல். பருத்தி வீரனுக்குப் பிறகு யாராவது கிராமத்துக் கதை கூறினால் பயம் இருக்கும். கொம்பன் கதை கேட்கும்போது தான் அந்த நம்பிக்கை திரும்ப வந்தது. அதன் வெற்றிக்குப் பிறகு இந்த கதை கூறினார். எல்லா கதையிலும் கதாநாயகனுக்கு அப்பா தான் நாயகனாக இருப்பார். ஆனால், இந்த கதையில் அப்பா தான் முதல் வில்லன். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும் ஒருவன், அப்பனே தப்பு செய்தாலும் விடமாட்டான் என்று கதை கூறினார். அந்த வரியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அப்பா யார் என்று கேட்டால், பிரகாஷ்ராஜ் தவிர வேறு ஆள் கிடையாது. அவரை எதிர்த்து நிற்கும் போது தனி சுகம் இருக்கும். அது அவருக்கும் பிடிக்கும்.
ஒரு வேலை செய்தால் பணம் மட்டுமே சம்பளம் இல்லை என்று கூறுவார். அவர் எல்லா படங்களுக்கும் சம்பளம் வாங்குவதில்லை. அதேபோல், சில படங்கள் நமக்கு அனுபவத்தை கொடுக்கும் என்று கூறுவார். அப்படி இரசித்து பணியாற்றக் கூடியவருடன் நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ராஜ்கிரண் சார் போனில் அழைத்து இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினார். அவர் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய விஷயம்.
இந்த விழாவை மதுரையில் வைத்து உங்களுக்கு எல்லாம் நேரில் நன்றி சொல்ல ஆசைப்பட்டு ஏற்பாடு செய்தோம்.
ஒளிப்பதிவாளர் சிவக்குமார் ஒவ்வொரு நாளும் மெனக்கெட்டார். அவரது குழந்தை பிறந்தும் கூட, இரண்டு மூன்று மாதங்கள் இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடித்து விட்டுத்தான் சென்றார்.
வடிவுக்கரசி அம்மா உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பாரதிராஜா அங்கிள் இங்கு வந்திருக்கிறார். பக்கத்து வீடான அவர் வீட்டில்தான் தான் நாங்கள் வளர்ந்தோம். இன்றளவும் நிலவாகவும் நட்சத்திரமாகவும் நாங்கள் பார்ப்பது அவருடைய படங்களை தான். முதல் மரியாதை படத்தை முறியடிக்கும் படியான ஒரு சிறந்த படத்தை நம்மால் எடுக்க முடியாதா என்று முத்தையாவிடம் கேட்டேன். கண்டிப்பாக எடுக்கிறோம். அப்போது தான் அங்கிள் உங்களுக்கு மரியாதை உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்.
அதேபோல், ஷங்கர் சார் யாரை விஞ்சுவதற்காக படம் எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு ஒரு படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் பாதியாவது எடுக்க முடியும்.
முத்தையா அதிதிக்கு சாதாரணமாக வாய்ப்பு கொடுத்து விடவில்லை. பல கோணங்களிலும் ஸ்க்ரீன் டெஸ்ட் வைத்துதான் இந்த படத்திற்கு அழகான நாயகி கிடைத்துவிட்டார் என்று தேர்வு செய்தார். சினிமாத்துறையில் ஒரு பெண்ணை எளிதில் அனுமதிக்கமாட்டார்கள். நான் நடிக்க வரும்போதே என் அப்பா வேண்டாம் என்றார். அப்படி இருக்கும்போது தன் பெண்ணை நடிக்க அனுமதித்த ஷங்கர் சாருக்கு சினிமாவின் மீது எந்த அளவுக்கு காதல் இருக்கும்? சினிமா துறையின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்?
ஒரு பெண் நடிக்க வந்தால் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் அப்பா கூறுவார். எம்ஜிஆர் அவர்கள் மற்றும் விஜயகாந்த் அவர்கள் பெண்களை எப்படி பார்த்துக் கொள்வார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தான் எங்களுக்கு உத்வேகம்.
படிப்பு வரவில்லை என்றால் தான் சினிமாவிற்கு வருவார்கள் என்று கூறுவார்கள். ஆனால், அதிதி மருத்துவம் படித்துவிட்டு இந்த துறையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
‘ஊரோரம் புளியமரம்’ என்ற பாடல் வந்த புதிதில் இரவு ஒரு மணிக்கு, BAR பாரில் இருந்து போன் செய்து உங்கள் பாட்டு தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். இப்பொழுது பகலிலும் போன் செய்து உங்கள் பாட்டுதான் ஓடுகிறது கேட்கின்றதா என்கிறார்கள். எனக்கு மிகப்பெரிய அடையாளம். அதைக் கொடுத்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி.
அதன் பிறகு பையா, நான் மகான் அல்ல என்று என் எல்லா படங்களுக்கும் அவரே இசையமைத்தார். இந்த படம் எடுக்கும்போதும் கிராமத்துக் கதை என்பதால் யுவனை விட்டு விடக்கூடாது என்று நினைத்தோம். கஞ்சா பூ கண்ணாலே பாடல் மாபெரும் வெற்றி பெறும்.
ரீ-ரெக்கார்டிங்கில் படம் பிளாக்பஸ்டர் ஆவது உங்கள் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால், சிறப்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளது என்று கூறினேன். என்னுடைய பால்ய சினேகிதன் மனோஜ்.
பாரதிராஜா அங்கிள் பையன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இங்கு அவர் வரவில்லை. ஆனால், அவரிடம் எப்படி கேட்பது என்று தயங்கி கொண்டே இருந்தேன். உன் படம் என்றால் நான் நடிக்க மாட்டேனா என்று வந்துவிட்டார். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு அண்ணனுடன் இந்த படத்தில் இணைகிறேன். இன்று விமானத்தில் வரும்போது இந்த படத்தை ஏன் தயாரித்தீர்கள்? என்று கேட்டேன். சட்டென்று உன் மீது இருந்த நம்பிக்கை தான் என்று கூறிவிட்டார்.
இயக்குனர் முத்தையா எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு முடிந்து விட்டால் இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் ஒரே மனிதர் இவர்தான். சினிமா, குடும்பம், (ஆரோக்கியம்) உடற்பயிற்சிக்கூடம் இம்மூன்றுக்கும் தான் முக்கியத்துவம் அளிப்பார். இதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. மிகச் சிறந்த உழைப்பாளி. கண்கலங்கும் படியான காட்சிகள் கூறுவார். அவருக்காகவே இந்தப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் அண்ணனும் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் இப்படம் வெற்றியடைய வேண்டும்.
பருத்தி வீரனுக்குப் பிறகு, மதுரையில் 60 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தினோம். இங்கேயே வாழ்ந்ததற்கான திருப்தி கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும் பருத்திவீரனின் சாயல் இருக்கக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருப்பேன். ஆனால், இந்த படத்தில் தவிர்க்க முடியவில்லை, லோக்கல் என்றாலே வேட்டியை தூக்கி மடித்து கட்ட தான் வருகிறது. சட்டை கசங்கி இருக்கிறது, தலை கலைந்து இருக்கிறதா என்று பார்க்க தேவையில்லை. அப்படியே தரையில் உட்கார்ந்து நடிக்கலாம்.
அழுக்கா அழகா இருக்கிற ஒரே ஆளு நீதான் என்று சூரி கூறுவர். இந்த படத்தில் அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிகவும் புதிதாக தெரிவார். மதுரை மண்ணுக்கு நன்றி. இந்த படம் வெற்றியடைய மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் ரோபோ ஷங்கர் பேசும்போது,
மதுரை மண்ணிற்கு பெருமை சேர்க்கக் கூடிய அற்புதமான இயக்குனராக பாரதிராஜா சாரை தான் நாங்கள் முதன்முதல் பார்த்தோம். படப்பிடிப்பிற்கு கேமராவை எடுத்து செல்வது இல்லை கேமராவின் கண்களை மட்டுமே எடுத்து செல்வேன் என்று ஆரம்பிக்கக் கூடிய பாரதிராஜா அவர்களுக்கு மிக்க நன்றி.
அதன் பிறகு என் அம்மா சுமார் ஐந்து முறை பார்த்த படம் பருத்திவீரன். இப்போது வேட்டியை மடித்துக் கட்டி மதுரை தமிழில் பேசும் படத்தை இயக்குனர் முத்தையா கொடுத்து வருகிறார்.
நடிகர் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்தேன் அவர் எல்லோரையும் ஐயா என்றுதான் அழைப்பார். மிகவும் மரியாதை மிகுந்த மனிதர். அவருடைய நிறுவனத்தில் எனது மகளுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. ஷங்கர் சாரின் எந்த விழாவாக இருந்தாலும் விடியவிடிய அனைவரையும் மகிழ்வித்து தான் செல்வேன். அது அதிதிக்கும் நன்றாக தெரியும். ஆனால், அவர் நிறைய நகைச்சுவைகள் கூறுவார். நமக்கு அதைக் கேட்டு கொண்டு குழை அற்று விடும்.
எனது குடும்பம் உருவத்தில் பெரியது. ஆனால், நான் எப்போதும் உருவத்தை வைத்து ஒருவரை எடை போட மாட்டேன். ஏனெனில், அவர்களுக்கு தான் பல திறமைகள் இருக்கும். எனது மகள் பரத நாட்டியம் மற்றும் கிராமிய நாட்டியத்தில் இவருடன் இணையாக ஆட முடியாது. வீணையும் கற்றுக் கொண்டு வருகிறார். முத்தையா அண்ணனிடம் அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன். அதேபோல், ஷங்கரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். ஷங்கர் vs ஷங்கர் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று இந்த மேடையிலும் கேட்கிறேன் என்றார்.
நான் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா எனது மண்ணில் நடப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை என் பெயரை கூறிய 2D சூர்யா சாருக்கும், ராஜா சாருக்கும் மிக்க நன்றி. எனது சொந்த ஊர் மதுரை என்றாலும் நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். எனக்கு மதுரையை மக்களோடு வாழவேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அதை நிறைவேற்றியது முத்தையா சார் தான். அதேபோல், என்னை ஏத்தா.. இதை பண்ணுத்தா என்று கூறும்போது எனது உறவினர் வீட்டில் இருப்பது போன்ற சந்தோஷம் கொடுத்தது. இங்கிருந்த நாட்களை என்னால் எப்போதும் மறக்க முடியாது.
நான் ஒரு கத்துக்குட்டி தான். ஆனால், இனி நன்றாகப் பார்த்துக் கொண்ட கார்த்தி அண்ணனுக்கு நன்றி.
சூரி மாமா கூறியதுபோல் முதல்நாள் படப்பிடிப்பில் சிறிது தயக்கம் இருந்தது. ஆனால், இரண்டாவது நாள் முதல் அந்த தயக்கம் மறைந்து விட்டது என்றார்.
சூர்யா வந்தாலே தாங்காது, மாறன் விருமன் இருவரும் வந்தால் சொல்லவா வேண்டும்? மதுரையே ஆரவாரமாக இருக்கிறது. ரசிகர்கள் சார்பாக சூர்யா அண்ணன் தேசியவிருது பெற்றதற்கு வாழ்த்துகள். இந்த விருதுகளெல்லாம் சினிமாவில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்தது. ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட, ஆயிரமாயிரம் அன்னச் சத்திரம் கட்டுவதைவிட, ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மத்திற்கு பேசப்படும். அவரின் குடும்பமும் அதைத் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், உங்கள் பின்னால் உறுதுணையாக பலரும் இருக்கிறார்கள்.
முத்தையா பிரதர் இயக்கத்தில் மருது படத்தில் நடித்திருக்கிறேன். பின் தேவராட்டம் படத்தில் நடித்தேன். இப்போது 3வது படமாக இதில் நடித்திருக்கிறேன். முத்தையா பிரதர் வெளியே இருக்கும்போது, கிராம படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், நகர்புற படங்கள் எடுப்பதில்லை. ஏன்? என்று கேட்டார்கள். எல்லோரும் நகர்ப்புற படங்கள் எடுத்தாலும், எங்களுடைய பிழைப்பு என்னவாகும்? ஷங்கர் சார் மைதானத்தில் நாங்கள் நுழையக் கூட முடியாது.
கருணாஸ் கூறியது போல, ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்த சினிமாவை, இதுதான் என் மண், இங்கே கேமராவை வையுங்கள் என்று திசைமாற்றியது பாரதிராஜா சார்தான். அவர் போட்ட விதைதான் இன்று எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆகையால், எல்லோரும் அந்த பக்கம் போய்விடாதீர்கள். ஆனால், எல்லா இயக்குனர்களும் இங்கு தேவைதான்.
கார்த்தி பிரதருடன், நான் மகான் அல்ல, கடைக்குட்டி சிங்கம் நடித்தேன். இப்படம் 3வது படம். முத்தையா பங்காளியுடனும் 3வது படம். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் நீங்கள் கதாநாயகன் தான். எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செய்கிறீர்கள். உங்களின் கடமை, விடாமுயற்சி ஆகியவைக்கு மதுரை மீனாட்சி என்றும் துணையிருப்பாள்.
இந்த விழா நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. கதாநாயகர்களுக்கு சமமாக உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த லட்சக் கணக்கான ரசிர்களில் நானும் ஒருவன். பஞ்சாப் கண்ணன் என்ற பாடலை கேட்காதவர்கள் பாவம் செய்தவர்கள். தினமும் இரவில் கேட்டுக் கொண்டிருப்பேன். எப்போது பார்த்தாலும் இந்தப் பாடலையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனது மனைவி கேட்டார். எல்லோரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறது அந்த பாடல்.
ரோபோ ஷங்கரின் மகளை சிறிய வயது முதல் பார்த்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் இயக்குனர் அவரை தூக்கி இடுப்பில் வைக்க முடியுமா? என்று கேட்டார். நான் ஒரு அடி பின்னால் சென்றேன். ஆனால், பாப்பா கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு ஓடினார். அவருடைய கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். அனைவரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.
இப்படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, ராஜ்கிரன் ஒழுக்கத்தின் முன்னுதாரணமாக இருக்கிறார். அவருடன் நடித்ததற்கு நன்றி.
அதிதியின் நடிப்பை பார்த்தால் 50, 60 படங்களில் நடித்தது போன்ற அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அத்தனை பாவனைகளை கொடுப்பார். அவரைக் கொடுத்த ஷங்கர் சாருக்கு நன்றி என்றார்.
இவ்விழாவிற்கு அழைத்த 2டி நிறுவனத்திற்கு முதலில் நன்றி. இந்த நேரத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற எனது நண்பனும், உடன் பிறவா சகோதரனுக்கு வாழ்த்துக்கள். அதற்கு எவ்வளவு போராட்டங்கள் இருக்கின்றது என்பது அவருடன் இருக்கும் எனக்குத் தெரியும். அதே நேரத்தில் நான் லொடுக்குப் பாண்டி கதாபாத்திரத்தில் நடித்த முதல் படம் நந்தா. அப்படத்தில் கதாநாயகன் சூர்யா தான். சாகும்வரை நான் எத்தனை கதாநாயகர்களுடன் நடித்தாலும் என்னுடைய கதாநாயகன் அவராகத்தான் இருப்பார். என்னுடைய தம்பி முத்தையா கொம்பன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் கொடுத்தார். இந்த படத்தில் அதைத் தாண்டி முக்கியத்துவம் வாய்ந்த அற்புதமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்.
கொம்பனுக்குப் பிறகு கார்த்தியுடன் நடிக்கும் 2வது படம். எல்லோராலும் நல்ல பிள்ளை என்று பாராட்டப்படுகின்ற என்னுடைய சகோதரர் கார்த்திக்கு வாழ்த்துகள். இளவரசு கூறியதுபோல, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்திருக்கிறார்.
முதல் முறை நடிப்பதற்கான பதற்றம் இல்லாமல், மதுரை சார்ந்த பெண்ணின் பேச்சு வழக்கு, பாவனைகளை அப்படியே செய்திருக்கிறார். சூரி என்னுடைய லொடுக்குப் பாண்டி கதாபாத்திரம் போல இப்படத்தில் செய்திருக்கிறார். இப்படத்தில் பலரும் நடித்திருக்கிறார்கள். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைத்திருக்கிறார். அனைத்திற்கும் மேலாக இயக்குனர் இமயம் பாரதிராஜா சார் இருக்கிறார். முத்தையா போன்ற இயக்குனர் உருவாவதற்கு அவர் போட்ட விதை தான் காரணம். கேமராவை முதலில் வெளியே எடுத்து வந்தது அவர். ஆனால், இன்று முத்தையா போன்ற இயக்குனர்கள் குறைவாக இருக்கிறார்கள். நகரத்தைச் சார்ந்த படம் எடுக்கப் போவதாக பேசிக் கொண்டிருந்தார். அதுபோன்ற படங்கள் எடுப்பதற்கு பலர் இருக்கிறார்கள். அதைக் கடந்து மண் சார்ந்த மொழி, கலாச்சாரம், உணர்வு போன்றவைகளை உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய இயக்குனர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
இப்படத்தின் இறுதிக் காட்சியில் கார்த்தியும், பிரகாஷ்ராஜும் இணைந்த நடிக்கும் காட்சிக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத்தரும். நான் எதையும் மிகைப்படுத்திக் கூறுபவன் அல்ல. சூரரைப் போற்று முதல் நாள் படப்பிடிப்பிலேயே தேசிய விருது கிடைக்கும் என்று கூறினேன். அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் இளவரசு பேசும்போது,
இரண்டு மூன்று வருடங்களாக தொடர்ந்து கார்த்தியுடனும் சூர்யாவுடனும் நடித்துக் கொண்டிருக்கிறேன். மதுரையில் நான் பிறந்த ஊரில் இப்படத்தின் விழா நடத்துவதற்கு மிகவும் நன்றி.
சென்னையில் சிங்கம் புலி அவர்கள் அசிட்டேன்ட டைரக்டராக இருந்தபோது நான் கேமரா மேனாக இருந்தேன். அப்போது ஒரு நாள் இரவு போலீசிடம் மாட்டிக் கொண்டோம். அப்போது சிங்கம் புலியிடம் பெயரை கேட்டு. போலீஸ்காரர்கள் மிரண்டு போனார்கள்.
வழக்கம் போல இப்படத்திலும் நாயகிக்கு அப்பா, கார்த்திக்கு மாமாவாக நடிக்கிறேன். கார்த்தி நடிகர் என்பதை உடைத்து இயக்குனராகும் தகுதி வளர்ந்துள்ளது. மண்ணும், மக்களும் சார்ந்து படமெடுக்கும் தம்பி முத்தையாவிற்கு நன்றி. நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கக் கூடிய சிறந்த குணசித்திர பாத்திரத்தை முத்தையா இப்படத்தில் எனக்கு கொடுத்துள்ளார்.
முத்தையாவிடம் லாக்ஃடவுனில் ஏதேனும் படம் பார்த்தீர்களா என்று கேட்டேன். அப்போது, அவர் கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, போன்ற படங்களை பார்த்தேன். இது தான் என் காலம். ஆங்கிலப் படம் பார்த்து வெளிநாட்டு நடிகர்களை வைத்தா படம் இயக்க முடியும் என்றார். இப்படி பட்ட இயக்குனர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
2டி நிறுவனத்தில் ஒரு படம் ஆசை இருந்தது. அது விருமன் திரைப்படத்தில் தான் நிறைவேறியுள்ளது. இயக்குனர் முத்தையா அவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் நானும் மதுரை பொண்ணு தான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதே போன்று வேட வேட என பேசும் ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். வருங்காலத்தில் அதிக படங்களில் வாய்ப்பு தருவதாக 2டி நிறுவனம் சார்பில் கூறியுள்ளனர். அதே போல் நடிக்க எனக்கும் ஆசை தான். அனைவரும் விருமன் திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி என்றார்.
இசையமைப்பாளர் யுவன் பேசும்போது,
சூர்யாவுக்கும் கார்த்திக்கும் ரொம்ப நன்றி. நீண்ட நாள் கழித்து இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி. 2D ராஜா சாருக்கும் நன்றி. படத்தின் ரீ ரெக்கார்டிங் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இன்று அல்லது நாளைக்குள் முடித்துவிடுவேன். முத்தையாவுடன் எனக்கு இது முதல் படம். படம் சிறப்பாக உள்ளது. அதிதி மற்றும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது. இதை கார்த்தியிடமும் கூறினேன்.
யுவன் மற்றும் கார்த்தி என்ற கூட்டணியின் மேஜிக் பையா, பருத்திவீரன், நான் மகான் அல்ல என அனைத்துப் படமும் ஆல்பம் ஹிட். அந்த மேஜிக் எப்படி நிகழ்கிறது?
நாங்கள் ஒரே குடும்பம் போன்று தான். பள்ளி முதல் இதுவரை நாங்கள் ஒன்றாக தான் பழகியுள்ளோம். இப்போது பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்குள்ளது. எங்களுக்குள் இருக்கும் அன்பும், அதை தாண்டிய இறைவனின் அருளும் தான் இந்த வெற்றிக்கு சாத்தியம்.
உண்மையை சொன்னால், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகவேண்டுமென்ற எண்ணத்தோடு நான் இசையமைக்கவில்லை. அனைவருக்கும் பிடிக்கும் ஒரு பாடலாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நினைத்து அமைத்த முதல் பாடல் தான் “கஞ்சாப்பூ கண்ணால”. அந்த பாடலுக்கு சிட் ஸ்ரீராம் குரல் கொடுத்தார். அதே போல் தான் இதற்கு முன் இசையமைத்த எல்லா பாடல்களுக்கும் குரல் கொடுத்தார்.
உங்களின் பள்ளி பருவம் பற்றி?
நான் எப்போதும் முழுமையான சீருடையில் செல்ல மாட்டேன். ஆனால், கார்த்தி எண்களின் ஹவுஸ் கேப்டன். என்னை கண்டதுமே “யுவன் அவுட்” என்று சொல்வார். நானும் ஓகே என்று வெளியில் வந்துவிடுவேன். பின்பு அந்த பெரிய பள்ளியை மூன்று முறை சுற்றி ஓடி வந்தால் தான் வகுப்பிற்கு செல்ல முடியும்.
கார்த்தி மற்றும் சூர்யாவை முதலாவதாக பாட வைத்தது நீங்கள் தான் அந்த அனுபவம் பற்றி? என்ற கேள்விக்கு…
பள்ளி படிக்கும் போது எனக்கு தெரியாது. ஆனால், பிரியாணி படத்தின் போது கார்த்தியை பாட வைத்தேன். அஞ்சான் திரைப்படத்தில் “ஏக் தோ தீன்” பாடலை சூர்யா பாடினார். மீண்டும் அவரை பாட வைத்து விடுவோம்.
எப்போது வித்தியாசமான உடையில் தான் விழாக்களுக்கு வருவீர்கள் இன்று வெட்டி சட்டை அணிந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டதற்கு…
மதுரைக்கு செல்கிறோம் அதனால், நீங்கள் இந்த உடையில் தான் செல்லவேண்டும் என்று என் மனைவி கூறினார். அதனால் தான் இந்த உடை அணிந்து வந்தேன். சமீப காலங்களில் என் உடையை தேர்வு செய்வது என் மனைவி தான். அவரின் தேர்வு சிறப்பாகவும் உள்ளது.
பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் மதுரையில் எப்போது?
கூடிய விரைவில் மதுரையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவோம் என்றார்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசும்போது,
இந்த வாய்ப்பு கொடுத்த ராஜா சாருக்கு நன்றி. கார்த்தி சார் நீங்கள் எனக்கு எந்தளவிற்கு உதவி செய்திருக்கிறீர்கள் என்று தெரியும். ஒவ்வொரு காட்சியையும் உற்சாகத்தோடும், நிறத்தை சமநிலைப்படுத்தியும் உதவிப் புரிந்ததற்கு நன்றி.
சூர்யா சாரை பூஜைக்குப் பின் சந்திக்கவில்லை. ஆனால், தயாரிப்பில் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாமே செய்துக் கொடுத்ததற்கு நன்றி. முத்தையா என்னை அண்ணனாக நடத்தினார். அதிதி மிகவும் பண்பான தன்மையான நபர் என்றார்.
கலை இயக்குனர் ஜாக்கி பேசும்போது,
நானும் இதே ஊர் தான். பருத்தி வீரனில் 5 படங்கள் மதுரையில் பணியாற்றியிருக்கிறேன். சென்னையில் இருந்ததைவிட மதுரையில் தான் அதிக நாட்கள் இருந்திருக்கிறேன். கார்த்தியுடன் இது 3வது படம். என் குடும்பத்து விழாவிற்கு வந்ததைப் போல் தான் இருக்கிறது.
ஒருபுறம் சூர்யா மற்றும் 2டி, மறுபுறம் கார்த்தி ஆகையால், என்னுடைய குடும்ப விழாவிற்கு அனைவரும் வருகைப் புரிந்ததற்கு நன்றி.
இப்படத்தின் கதையை முத்தையா கொடுத்தார். ஆனால், நான் அதைப் படிப்பதற்கு அதிக நாட்கள் ஆனது. ஒருநாள் நான் அவரை நேரில் சந்திக்க சென்றேன். நான் ஆரம்பித்திலிருந்து கதை கூறுகிறேன் என்றார். எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் மொத்தப் படத்தின் கதையையும் கடகடவெனக் கூறிவிட்டார். அதன்பிறகு அவருடன் பழகும்போது தான் தெரிந்தது. அவருடைய ஊர் மக்கள் என்பதால், போகிற போக்கில் அவர் வாழ்க்கையில் நடந்த 5 விஷயங்களைக் கூறுகிறார்.
எனக்குத் தெரிந்து அதுவும் அவர் வாழ்க்கையில் நடந்ததை மட்டுமே எடுத்து சுமார் 500 கதைகள் வைத்திருக்கிறார். அந்தளவிற்கு வாழ்க்கையோடு ஒன்றி ரத்தமும் சதையுமாக இயல்பாக இருக்கிறார். அதை ஓரளவிற்கு பொருத்துவதற்கு நான் வேலை பார்த்திருக்கிறேன்.
பாரதிராஜா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருடன் பணியாற்ற இயலவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்படத்தின் படபிடிப்பில் அவருடன் இருந்தேன் என்பதற்கு நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது என்று செல்வம் கூறினார். முத்தையா படம் என்பதால் 100 சதவீதம் நம்புகிறேன் என்றார்.
நடிகர் சிங்கம்புலி பேசும்போது,
என்ன பேசவதென்று தெரியவில்லை. 2டி நிறுவனத்தைப் பற்றி பேசுவது எனது குடும்பத்தைப் பற்றி பேசுவது போல உள்ளது. 2002ம் ஆண்டில் அஜித்தை வைத்து ரெட் என்ற படத்தை இயக்கினேன். அதன் பின்பு தான் சூர்யா சாரை சந்தித்தேன். அவருடன் அப்போது சரியாக பேசக்கூட முடியவில்லை. ஆனால், என்னுடைய திருமண வரவேற்பிற்கு வந்து கடைசி ஆளாக சென்றவர் நடிகர் சூர்யா. மதுரை மண்ணில் 113 நாட்கள் சூர்யாவுடன் நான் வேலை பார்த்தேன். இவரையெல்லாம் வைத்தா படம் எடுக்கிறீர்கள்? என்று கேட்டதை இவரை வைத்து படம் எடுக்கிறீர்களா? என்று கேட்க வைத்தவர் சூர்யா. அதன் பின் நீங்கள் எழுதினால் நான் நடிக்கிறேன் என்று சூர்யா சொன்னதன் பிறகு அவருக்கென கதை எழுதி உருவாக்கப்பட்ட படம் தான் பேரழகன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாயாவி திரைப்படம் இணைந்து பணியாற்றினோம். இயக்குனர் பாலா தயாரித்த முதல் படம் அது. அதை ஜோதிகா மற்றும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியது சந்தோஷம்.
என்னிடம் யாரவது நீங்கள் என்ன படம் இயக்கியுளீர்கள் என்று கேட்டால். பேரழகனையும் மாயாவியையும் தான் கூறுவேன். அதன் பின் ரேணிகுண்டா போன்ற படங்களில் வசனங்கள் எழுதியதை சொல்லுவேன். பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளேன். சினிமாவில் வெற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், பல தோல்விகளைக் கண்டிருக்கிறேன்.
ஏழைகளைத் தேர்ந்தெடுத்து படிக்க வைத்து மேலே வைத்து அழகுப் பார்ப்பவர் சூர்யா. இவர் எனக்கு உதவி செய்திருந்தால் நான் பி.இ முடித்துவிட்டு எம்.இ முடித்துவிட்டு எங்க ஊருக்கு சாலை அமைக்க சென்றிருப்பேன். இது போன்ற நல்ல காரியங்களை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். எங்கள் பொடணி வலிக்கும் வரை நாங்கள் உங்களை அண்ணார்ந்து பார்க்க வேண்டும்.
புலி குத்தி பாண்டி மற்றும் விருமனில் நடிக்க வாய்பளித்ததற்கு. தம்பி முத்தையாவிற்கு நன்றி.
வெங்கடேசன் எம்.பி. பேசும்போது,
இந்த விழாவை மதுரையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்த 2டி நிறுவனம் சூர்யா மற்றும் கார்த்திக்கு நன்றி. மதுரையில் ஒரு படம் வெற்றிப் பெற்றால் அது தமிழ்நாட்டின் வெற்றி என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தததற்கு மகிழ்ச்சியாக உள்ளது. சூர்யா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தப் பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சி. அவருடைய திறமைக்கு மிகவும் தாமதாகவே கிடைத்துள்ளது. ஆனால், மதுரை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி. அனைவரும் கூறியது போல சூர்யா, கார்த்தி இருவரும் திரையில் மின்னுவதைவிட, திரைக்கு வெளியே கல்வி, விவசாயம் என்று அவர்கள் காட்டுகின்ற முகம் அனைவரின் குடும்பத்தில் ஒருவராக கருதுகின்ற மனம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இன்னொன்றும் சொல்ல ஆசைப்படுகிறேன். கொரானா காலக்கட்டத்தில் அன்னவாசல் திட்டத்தின் மூலம் ஒன்றரை லட்சம் பேருக்கு உணவு வழங்கினோம். அதற்கு பங்களிப்பு செய்த சூர்யாவிற்கு இந்த மேடையில் நன்றி கூறுகிறேன். பணம் வரும், போகும். ஆனால், இக்கட்டான காலகட்டத்தில் தனது பங்களிப்பைக் கொடுத்த சூர்யாவிற்கு நன்றி.
வேட்டியை மடித்துக் கட்டி கார்த்தி நடந்து வரும்போது மதுரையின் அசல் பாணியை அவர் உடல்மொழியில் கடைப்பிடித்திருக்கிறார். கைலியை ஏற்றிக் கட்டினால், மதுரைக்காரனாகவும், குதிரையில் வந்தால் வந்திய தேவனாகவும், தோன்றுகிறார். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.
அதிதி நடிக்கிறார் என்ற செய்தி இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பாடல், நடனத்தில் அவருடைய ஆர்வம் தெரியும். ஆனால், ஷங்கர் சார் போன்ற பெரிய இயக்குனர்களின் குடும்பத்தில் இருந்து பெண் நடிக்க வருவது, சினிமாவின் ஆரோக்கியமான சூழலை வெளிப்படுத்துகிறது. மதுரைக்காரர்கள் கதாபாத்திரத்தில் நடித்தால், அது தமிழ்நாட்டின் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு சமம். இது 2000 வருடத்தின் உளவியல். கஞ்சா பூ கண்ணோட 2கே கிட்ஸோட எல்லோர் செல்போனிலும் அந்தப் பாடல் தான் இருக்கிறது. முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கு காலம் அதிகம் இருக்கும். ஆனால், அதிதி முதல் படம் வெளியாவதற்குள்ளேயே அடுத்த படத்திற்கு பூஜைப் போட்டு விட்டு வந்திருக்கிறார். இந்த முரண் குடும்பத்திற்கு அழகு சேர்க்கிற விஷயம்.
ஒருவரிடம் 5 நிமிடம் பேசினாலே அவர் மதுரைக்காரர் என்று கண்டுபிடிக்கலாம். அதுபோல, ஒரு இசையைக் கேட்டால் அது யுவனின் இசை என்று கண்டுபிடிக்க முடியும். சினிமாவில் ரூ.100 கோடி சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், யூடியூபில் ஒரு பாடலுக்க 100 கோடி பார்வையாளர்களை சம்பாதித்தது யுவன் மட்டும் தான் என்று நினைக்கிறேன்.
பெருமதிப்பிற்குரிய பெரும் கலைஞன், இந்த மண்ணின் பெருமைகளுக்கெல்லாம் காரணம் பாரதிராஜா சார் தான். இப்படம் பெரும் வெற்றியடைவதற்கு வாழ்த்துகள். எல்லோரும் மதுரைக்கு வந்து சேருங்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை அதிதி ஷங்கர் பேசும்போது,
என்னுடைய ஆசை கனவு அனைத்தும் தரையிலிருந்து திரையில் வருவது தான். அது நிறைவேற துணையாக இருந்த அப்பா, அம்மா மற்றும் என்னுடன் பிறந்த சகோதரன், சகோதரிக்கு நன்றி. இவ்வளவு பெரிய வாய்ப்பளித்த 2D நிறுவனம் சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா சார் அவர்களுக்கு நன்றி. தேசிய விருது பெற்றதற்கு சூர்யா சாருக்கு வாழ்த்துக்கள். என்னை தேன்மொழியாக மாற்றிய இயக்குனர் முத்தையாவிற்கு நன்றி. முத்தையா மிகவும் நேர்மையான மனிதர். வேலையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார். அவர் ஓவ்வொரு காட்சியை விளக்கும் போதும் அந்த கதாபாத்திரமாகவே நடித்துக் காட்டுவார். அப்போது உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர் கண்கள் கலங்கும்.
என்னுடைய அறிமுக படத்தில் யுவனுடன் பாடியதில் மிகவும் மகிழ்ச்சி. நான் யுவனின் மிக பெரிய ரசிகை. என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்த தங்கதுரைக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் செல்வா சார் என்னை மிக அழகாக திரையில் காட்டியுள்ளார்.
கார்த்தியின் நடிப்பை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கும். அவருடன் இணைந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் எனக்கு நிறைய கற்றுத் தந்தார். என்னை ஒரு புது முகம் போல் அவர்கள் நடத்தவில்லை. 2D நிறுவனம் முழுவதுமே என்னை அவர்களின் குடும்பப் பெண் போன்று தான் பார்த்துக் கொண்டார்கள்.
அப்பா பலரை கேமரா முன் நிறுத்திப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் முதல் முறையாக கேமரா முன் நின்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?
நான் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை பயத்துடன் தான் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், முதல் காட்சியே பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. ஷோபி மாஸ்டர் தான் அந்த பாடலுக்கு நடனம் கற்றுத் தந்தார். அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.
சினிமா பின்புலம் இருக்கக் கூடிய ஒரு மிகப்பெரும் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வருவோரை மக்கள் அதிகம் கவனிப்பர். அப்படியான அழுத்தங்களை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?
நான் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. என் அம்மா அப்பா இருவரும் எனக்கு ஊக்கமளித்தார்கள். ஆனால், நான் இந்த சினிமாத் துறையில் நிலைத்திருப்பது என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன் என்றார்.
என்னுடைய மகளுக்கு வாய்ப்புக் கொடுத்த 2டி நிறுவனத்திற்கும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் 2டி நிறுவனத்தைச் சார்ந்த அத்தனை பேருக்கும் நன்றி. இப்படத்தி 2டி நிறுவனம் தயாரிக்கிறது என்று கேட்டதும், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், தொடர்ந்து நல்ல படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
தேசிய விருது பெற்ற சூர்யாவிற்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்தியை திரையில் பார்த்தாலே பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்கின்ற தரமான நடிகர். அவருடன் அதிதி நடிப்பதில் மகிழ்ச்சி. அவர் சகோதரர் போல அவரும் கூடிய விரைவில் தேசிய விருது வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
கஞ்சா பூ கண்ணாலே, மதுரை வீரன் போன்று பல கிராமத்து பாடல்கள் வந்துவிட்டது. இருந்தாலும், அதில் புத்துணர்ச்சி தருவது சிறப்பான விஷயம். ரிதமில் புதிதாக ஏதோ செய்கிறார் யுவன். அருமையாக இசையமைக்கும் யுவனுக்கு வாழ்த்துகள்.
முத்தையாவின் படங்களைப் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய படங்களில் பெண்களுடைய கதாபாத்திரத்தை அருமையாக சித்தரிப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எனது மகள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. செல்வ குமார் ஒளிப்பதிவை ஆழமாக உணர முடிந்தது. கலை இயக்குனரின் பணியும் பாராட்டுக்குரியது.
என் மகளைப் பற்றி நான் என்ன கூறினாலும், ஒரு அப்பா தன் பெண்ணைப் பற்றி பெருமையாகக் கூறுவது போலத்தான் இருக்கும். ஆனால், ஒரு இயக்குனராக அவரை கவனத்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த பொழுதுபோக்காளர். அவர் மேன்மேலும், திறமையை வளர்த்துக் கொள்வது, முத்தையா மாதிரி இயக்குனர் கைகளிலும், ரசிகர்கள் கைகளிலும் தான் இருக்கிறது.
இந்த வாய்ப்புக் கொடுத்த தங்கதுரை, பத்திரமாக பார்த்துக் கொண்ட 2டி ராஜசேகர், பாபி அவர்களுக்கும் நன்றி.
உங்களைப் பார்த்து இயக்குனராக வேண்டும் என்று பலரும் நினைத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் நிறைய அறிவுரை வழங்கியிருப்பீர்கள். ஆனால், உங்கள் மகளுக்கு நீங்கள் கூறிய அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு..
என் மகளுக்கு நான் எந்த அறிவுரையும் வழங்கவில்லை. மேலும், அவருக்கு அறிவுரை வழங்குவது பிடிக்காது. அதுமட்டுமில்லாமல், இக்காலத் தலைமுறையினர் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்றார்.
நாங்கள் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிதி அவருடைய இருக்கையில் அமைதியாக இல்லாமல், ரோலக்ஸ் என்று கூச்சலிட்டும், கைத்தட்டி ஆரவாரத்தோடும் இருக்கிறார். அவர் என்ன வாலா? என்ற கேள்விக்கு..
அவர் இப்போது தான் நடிகை. அதற்கு முன் எல்லோரும் போல கைத்தட்டி ரசிக்கும் ரசிகை என்றார்.
இப்படத்தின் டிரைலர் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கிறது. இப்படத்தின் வெற்றித் தெரிகிறது என்றார்.