மகான்: ஃபோனில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த் – நெகிழ்ந்துபோன கார்த்திக் சுப்புராஜ்

0
128

மகான்: ஃபோனில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த் – நெகிழ்ந்துபோன கார்த்திக் சுப்புராஜ்

‘மகான்’ திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜை, ஃபோனில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனது 60-வது படமான ‘மகானில்’ முதன்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், லலித்குமார் தயாரித்துள்ள இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்தப் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1960, 1996, 2003 மற்றும் 2016 என நான்கு விதமான காலகட்டங்களில் நடக்கும் கதையாக ‘மகான்’ படம் உருவாகியுள்ளது.

சந்தோஷ் நாரயணன் இசையத்துள்ள இந்தப்படம், நேற்று முன்தினம் இரவு அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ‘மகான்’ படத்தைப் பார்த்த ரசிகர்கள் வேற லெவலில் இருப்பதாக ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்துவிட்டு, மிகவும் அருமையாக உள்ளதாக, ‘மகான்’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை ஃபோனில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, கார்த்திக் சுப்புராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “‘சிறந்த திரைப்படம்… சிறப்பான நடிப்பு…. புத்திசாலித்தனமான திரைக்கதை” என ‘மகான்’ படத்தை தலைவர் பாராட்டினார். அவருக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது. உங்கள் அழைப்புக்கு நன்றி தலைவா….. உங்கள் பாராட்டால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் இந்தப் பதிவுக்கு, தலைவர் ரஜினியுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து எடுங்கள் என்று, ரசிகர்கள் அவரிடம் கோரிக்கை வைத்து விருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டில் ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.