பூசாண்டி வரான் விமர்சனம்: விலைமதிப்பில்லா மரகத நாணயம் | RATING – 3 STAR

0
124

பூசாண்டி வரான் விமர்சனம்: விலைமதிப்பில்லா மரகத நாணயம்  RATING – 3 STAR

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்து ஜே.கே.விக்கி எழுதி இயக்கியுள்ள படம் பூசாண்டி வரான்.
இதில் மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன், ஹம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்தரம், தினேஷிணீ ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-அசலிஷம் பின் முஹம்மத் அலி, இசை-டஸ்டின் றிடுங் ஷ், ஒலி வடிவமைப்பு-ஜேசன், எடிட்டிங்-ஜே.கே.விக்கி, மக்கள் தொடர்பு-பி.ஸ்ரீவெங்கடேஷ்.

மலேசியாவில் ஷங்கர், அன்பு, குரு மூவரும் நண்பர்கள் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். ஷங்கர் ஜாக்பாட் விளையாட்டு பிரியர். தொல்பொருட்கள், நாணயங்களை சேகரித்து விற்பனை செய்பவர் மாற்றுத்திறனாளி அன்பு. இவர்கள் மூவரும் ஸ்பீட் ஆஃப் தி காய்ன் என்ற விளையாட்டை விளையாட தீர்மானிக்கின்றனர். இந்த விளையாட்டில் பேயுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் இதனால் நன்மையும், தீமையும் ஏற்படலாம் என்பதை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்கின்றனர். தமிழ் அல்லது ஆங்கல எழுத்தக்கள் உள்ள அட்டையில் பழமை வாய்ந்த நாணயத்தில் ரத்தம் சிந்தி விரலை வைத்து பேயை அழைக்க, அந்தப் பேய் அந்த எழுத்துக்கள் மூலம் விரலை நகர்த்தி வார்த்தையில் புரிய வைக்கும். மூவரும் இந்த விளையாட்டை விளையாட தொடங்க, அவர்கள் எதிர்பார்த்த மாதிரி மல்லிகா என்ற பேய் இவர்களிடம் பேச ஆரம்பிக்க, கேள்விகளுக்கு பதிலும் சொல்கிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆசைகளை நிறைவேற்றுமாறு மூவரும் கேட்க, பேய் பிரதிபலனாக மனித உடலை கேட்கிறது. இதனால் கோபமாகும் குரு, மற்ற இரு நண்பர்களை எச்சரிக்கிறார். மறுநாள் குரு அடிபட்டு இறந்து கிடக்கிறார். அதற்கான காரணம் தெரியாமல் இரு நண்பர்களும் தவிக்கின்றனர். இந்த சம்பவத்தை கேள்விப்படும் ஆமானுஷ்ய சக்தியைப்  பற்றி கட்டுரைகள் எழுதும் தமிழ்நாட்டு நிருபர் முருகன், மலேசியா வந்து இவர்களுக்கு உதவி செய்ய முற்படுகிறார். அன்பு அந்த நாணயத்தை யாரிடம் வாங்கினார் என்பதை கேட்டு முருகன் இரு நண்பர்களுடன் அந்த முகவரிக்கு செல்கின்றார். அங்கே உயிரோடு மல்லிகா என்ற பெண் இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகின்றனர். மல்லிகா இவர்களிடம் சொன்ன ரகசியம் என்ன? அந்தப் பேய் மல்லிகா என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? குருவை யார் கொன்றார்கள்? நண்பர்களின் ஆசையை பேய் நிஜமாக நிறைவேற்றியதா? நாணயத்தால் நேர்ந்த விபரீத முடிவு என்ன? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.

ஷங்கராக மலேசிய தமிழ் நடிகர் தினேஷ் சாரதி கிருஷ்ணன் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தன் கதாபாத்திரத்தை உணர்ந்து, சில இடங்களில் நகைச்சுவை கலந்து திறம்பட நடித்துள்ளார். தன் நண்பனின் சம்பாத்தியத்தில் வாழ்வது, நண்பன் இறப்பை தாங்க முடியாமல் கதறுவது, நட்பிற்காக உதவியவரையே இறுதியில் மாட்டிவிட்டு தப்பிக்க நினைப்பது என்று படம் இறுதியில் பேராசை பெருநஷ்டம் என்பதை உணர செய்துள்ளார்.

மாற்றுத்திறனாளி அன்புவாக மலேசிய தமிழ் நடிகர் லோகன் நாதன் அமைதியாக, தன் பார்வையிலேயே சோகம், மகிழ்ச்சி, சுழ்ச்சி, துரோகம் என்று எண்ணத்தை பிரதிபலித்து, தன் ஆசை நிறைவேற நண்பனையே பணையம் வைக்கும் கேரக்டரில் அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார்.

குருவாக மலேசிய தமிழ் நடிகர் கணேசன் மனோகரன் நண்பராக, முரட்டு குணத்துடன் கச்சிதமாக செய்துள்ளார்.

மதுரைத் தமிழர் மிர்ச்சி ரமணா முருகனாக முக்கிய கதாபாத்திரத்தில் ஆமானுஷ்ய சக்தியின் மர்ம முடிச்சை விலக்கும் முயற்சியில் தைரியம் நிறைந்த நிருபராக களமிறங்கி ஒவ்வொன்றையும் தன்னுடைய சாதுர்யத்தால் கண்டுபிடித்து உதவ அதுவே தனக்கு இறுதியில் வினையாகும் என்பதை அறியாத இளைஞராக அனைவரும் கவரும் விதமாக கவனிக்க வைக்கும் அளவிற்கு நடித்துள்ளார்.
மலேசியாவின் அழகையும், வயல்வெளியில் ஒளிந்திருக்கும் மர்மத்தையும், வீட்டில் நடக்கும் சம்பவங்களையும், விடுதியில் ஆமானுஷ்ய சக்தியின் பயத்தையும், வறண்ட பகுதியில் மழையின் நடுவே பூசாண்டி ஆக்ரோஷமாக  தோன்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் என்று த்ரில்லிங்காக காட்சிக்கோணங்களை அமைத்து ஒளிப்பதிவு செய்துள்ளார் அசலிஷம் பின் முஹம்மத் அலி.

டஸ்டின் றிடுங் ஷ் இசை ரசிக்கும்படியும், பயமுறுத்தும் ஒலி வடிவமைப்பு செய்திருக்கும் ஜேசன் ஆகியோர் படத்திற்கு பலம்.

எடிட்டிங், இயக்கம்-ஜே.கே.விக்கி. பூசாண்டி வரான் மலேசியாவில் தயாரித்து வெளியிட்டு பெரும் வெற்றி பெற்று வரவேற்பை பெற்ற படம். பெரும்பாலான மலேசிய படங்கள் மனதில் பதியாமல் கடந்து போனதுண்டு. ஆனால் இந்தப் படம் டைட்டிலுக்கு கேற்ற திரைக்கதையில் ஈர்க்க வைத்து வசனங்களில் புரிய வைத்து நட்புடன் வரலாற்றை கலந்து ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், தோய்வில்லாமல் க்ளைமேக்ஸ் வரை எதிர்பார்ப்போடு காட்சிகளை எடுத்துள்ளார் ஜே.கே.விக்கி. முக்கிய திருப்பங்களுடன் கதை நகர்வதாலும், இந்து மதத்தின் வரலாற்றை பூசாண்டி என்று அழைக்கப்பட்ட காரணத்தை வரலாற்று மலேசிய பின்னணியில் திரைக்கதையமைத்து அனைவருமே ரசிக்கும் வண்ணம் அர்த்தத்தோடு தெளிவாக புரிய வைத்திருப்பதிலேயே வெற்றி பெற்று விடுகிறார் இயக்குனர் ஜே.கே.விக்கி. வெல்டன். இவரின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் நிச்சயம் வெற்றி வாகை கிட்டும். இரண்டாம் பாகமும் தயாராகி வெளி வர காத்திருப்பது கூடுதல் தகவல். மலேசியாவில் மட்டுமல்ல இங்கும் இது போன்ற ஆமானுஷ்ய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறி பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதை வைத்து அதன் பின்னணியில் தன் கற்பனை திறனுடன் சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர்.ஜே.கே.விக்கி.

மொத்தத்தில் ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்து வெளிவந்திருக்கும் பூசாண்டி வரான் படம் முழுவதும் த்ரில்லிங்கோடு அசத்தலாக களமிறங்கியிருக்கும் பழங்கால நாணயம் அல்ல விலைமதிப்பில்லா மரகத நாணயம்.