புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசிய ரஜினி – ரீ ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகும் பாபா
ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு மிகவும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர் , படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட தீவிரமாக யோசித்து வருகின்றனர்.