பிஸ்கோத் விமர்சனம்

0
230

பிஸ்கோத் விமர்சனம்

நரேன், ஆனந்தராஜ் இருவரும் சிறிய அளவில் பிஸ்கட் கம்பெனி நடத்த, நரேனுக்கு இந்த பிஸ்கட் கம்பெனியை பெரிய அளவில் உயரச்செய்து தன் மகன் சந்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் திடீரென்று நரேன் இறந்து விட ஆனந்தராஜ் பிஸ்கட் கம்பெனியை தன் வசம் ஆக்கிக்கொண்டு, சந்தானத்தை சூப்பர்வைசராக வைத்துக் கொள்கிறார். சந்தானம் வேலை செய்து கொண்டே முதியோர் இல்லத்திற்கு தினந்தோறும் சென்று அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்து மனம்மகிழ்கிறார். அந்த முதியோர் இல்லத்தில் பாட்டி சௌகார் ஜானகி வந்து சேர தூங்கும் நேரத்தில் அவர் சொல்லும் கதைகள் எல்லாம் சந்தானம் வாழ்க்கையில் நடக்க ஆரம்பிக்கிறது. பாட்டியின் கதை  சொல்லும் பழக்கம் சந்தானத்தின் வாழ்க்கையில் வெற்றியையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராஜாவாக சந்தானம் மூன்று வித பரிணாமங்களில் ஜொலித்து சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறார். இவருடன் ஜோடிகளாக அனிதாவாக தாரா அலிஷா பெர்ரி, லயாவாக ஸ்வாதி முப்பல்லா வந்து போகிறார்கள். மற்றும் ஜானகி பாட்டியாக சௌகார் ஜானகி, தர்மராஜாக நரேன், நரசிம்மனாக ஆனந்தராஜ், கணேசாக பரத்ரெட்டி, மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், சிவசங்கர் மாஸ்டர், பூஜ்ஜி பாபு என்று படத்தின் பக்கமேளங்களாக பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

என்;;.சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும், செல்வா.கே எடிட்டிங்கும், ரதனின் இசையும் படத்திற்கு பக்கபலம்.

தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மகனின் கதையை ஹாலிவுட் படத்தின் தழுவலோடு சில படங்களை சந்தானத்திற்கு ஏற்றவாறு ரீகிரியேட் செய்து பாட்டி சொல்லும் கதையாக பட்ஜெட் படமாக இயக்கி தன்னால் முடிந்தவரை சுவாரஸ்யம் குறையாமல் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

மொத்தத்தில் பிஸ்கோத் பல வண்ணங்களில் கொடுத்தாலும் சுவை குறையாமல் இருக்க வேண்டும்.