பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு

0
115

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு

‘பிக் பி’ அமிதாப்பச்சனின் பிறந்தநாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக்குழு

பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, ‘புராஜெக்ட் கே’ படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வருகிறார்.

நேற்று அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்த நாள். இதனை கொண்டாடும் வகையில் ‘புராஜெக்ட் கே’ படக் குழுவினர் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்தும் வகையில், அவருடைய முஷ்டி மடக்கிய கையை மட்டும் தனித்துவத்துடன் வடிவமைத்து போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடன் ‘அழியாத தன்னிகரற்ற சாதனையாளர்’  என்ற வாசகத்தையும் இடம்பெற வைத்து வாழ்த்திருக்கிறார்கள்.

திரைப்பட தயாரிப்பு துறையில் பொன்விழா ஆண்டு காணும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் , ” கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக ரசிகர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் சக்தி மையம்!. இந்தத் தருணத்தில் உங்களுடைய புதிய அவதாரத்தை உலகுக்கு காட்ட ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களிடம் இருக்கும் ஆற்றல் உங்களுடனேயே நீடித்து இருக்கட்டும். எங்களுக்கு பின்னால் இருக்கும் அளவற்ற சக்தி நீங்கள்தான். அமிதாப்பச்சன் ஐயா…! – புராஜெக்ட் கே பட குழு” என  தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு அவர் நடித்து வரும் ‘புராஜெக்ட் கே’ பட குழுவினரின் புதிய போஸ்டர் வடிவிலான வாழ்த்து, ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.