பாடல்கள் இல்லாத – புதுமையான ஹாரர் திரில்லர் Bamboo Trees Productions T. ஜீவிதா கிஷோரின் 3:33 திரைப்படம்
Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் சாண்டி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
3.33 படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்த நிலையில், வரும் அக்டோபர் 21 ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. பட வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில், Bamboo Trees Productions சார்பில் தயாரிப்பாளர் T. ஜீவிதா கிஷோர் பேசியதாவது…
இந்தப் படத்தின் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். இது முழுமையான ஹாரர் படமாக இருக்கும். சாண்டி அண்ணாவிடம் நீங்கள் எதிர்பார்த்தது இதில் இருக்காது முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள், கௌதம் மேனன் சார் மிகப்பெரும் ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படம் அக்டோபர் 21 ந்தேதி வருகிறது. அனைவரும் தியேட்டர் வந்து பார்த்து ரசியுங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் சதீஷ் மனோகரன் பேசியதாவது…
இப்படம் முழுக்கவே சீரியஸான ஹாரர் மூவி, சாண்டி மாஸ்டர் எங்கேயும் காமெடி செய்திருக்க மாட்டார். நம்பிக்கை சந்துரு மிக வித்தியாசமான திரைக்கதை செய்துள்ளார். படத்தை அனைவரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பேசியதாவது…
இது எனக்கு இரண்டாவது படம், சந்துருவுடன் முதல் சந்திப்பே வித்தியாசமாக இருந்தது. கதை சொல்லும் போதே நடித்து காட்டி சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறிது காலம் அவரை காணவில்லை திரும்ப வந்து, அவரது அக்கா தயாரிக்கிறார் என்று சொன்னார். இப்படத்தில் இசையில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சதீஷ் சூப்பராக ஒளிப்பதிவு செய்திருந்தார். சாண்டி மாஸ்டர் இப்படத்திற்கு பிறகு பெரிய இடத்திற்கு செல்வார். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
நாயகி ஸ்ருதி செல்வம் பேசியதாவது…
என்னோட நடிப்பு, குறும்படம் மற்றும் ஆல்பமில் தான் தொடங்கியது, ஆரம்பத்தில் ‘நீயெல்லாம் ஏன் நடிக்கிற’ என்று தான் கேட்டார்கள். அதையெல்லாம் பாஸிட்டிவாக எடுத்து கொண்டு தான், இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன். சாண்டி மிகப்பெரிய ஆதரவை தந்தார். நடிக்கும் போது மிக உதவியாக இருந்தார். நம்பிக்கை சந்த்ரு கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது. இந்தப் படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். Bamboo Trees Productions நிறுவனத்தின் தூண் T.ஜீவிதா கிஷோர் தான். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.
நாயகன் சாண்டி பேசியதாவது…
3:33 நாயகனாக எனது முதல் படம் இது. பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கதை கேட்டேன், ஏதாவது சீரியஸாக பண்ணலாமே என யோசித்துக் கொண்டிருந்த போது, சந்துரு கதை சொல்கிறேன் என்றார். அவர் கதை சொல்லும் போது, அந்த இடத்தையே ரணகளமாக்கி, நடித்து, கதை சொன்னார். இந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால் நான் தான் வேணும் என்றார் சந்துரு. இந்தப்படத்தின் உண்மையான நாயகன் சந்துரு தான். இந்தப்படத்தில் சூப்பராக வேலை வாங்கினார். அவர் நடித்து காட்டியதில் 50 சதவீதம் தான் நான் செய்துள்ளேன். அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார். நான் நடிக்கிறேன் என சொல்லும் போது, நிறைய பேர் வேண்டாம் என்றார்கள். நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள் என்றார்கள். ஆனால் எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பது தான் ஆசை. படம் ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள். தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய லாபத்தை சம்பாதித்து தரும். இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். பத்திரிக்கையாளர்கள் தான் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.
இயக்குநர் நம்பிக்கை சந்துரு பேசியதாவது…
என் வாழ்க்கையில் இயக்குநராக நிறைய முயற்சி செய்தேன். மூன்று படங்கள் அடுத்தடுத்து டிராப் ஆனது. என் குடும்பம் தான் என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப்படத்தை எடுக்கலாம் என்றார்கள். சொந்த முயற்சி எனும் போது, யாரை வைத்து செய்யலாம் என யோசித்த போது, சாண்டி மாஸ்டர் ஞாபகம் வந்தது. அவரிடம் தயங்கி தான் போனேன் ஆனால் கட்டியணைத்து கதை கேட்டு பாராட்டினார். இசையமைப்பாளரிடம் இது என் வாழ்க்கை என்னிடம் இப்போது பணம் இல்லை உதவுங்கள் என்றேன். கதை கேட்டு என்னை பாராட்டி அருமையான இசையை தந்தார். ஒளிப்பதிவாளர் மீது முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் வைத்த முதல் ஷாட்டிலேயே பிரமித்து விட்டேன். கௌதம் சார் இப்படத்தில் வந்தது ஒரு ஆக்ஸிடெண்ட் தான். பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டராக வருகிறார். அந்த கேரக்டருக்கு மிக பெரிய ஆள் வேண்டும் என்று நினைத்தோம், கௌதம் சாரை அணுகி கதை சொன்னோம். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார், அவரை இயக்கும் போது பயமாக தான் இருந்தது. ஆனால் ஒரு பெரிய இயக்குநர் போல் அவர் எந்த பந்தாவும் இல்லாமல் நடித்து தந்தார். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.