பசுபதி நடிக்கும் ‘தண்டட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0
145

பசுபதி நடிக்கும் ‘தண்டட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் பசுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தண்டட்டி’, என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தண்டட்டி’. இதில் நடிகர்கள் பசுபதி, விவேக் பிரசன்னா, நடிகை ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

தங்கத்தை மையப்படுத்தி கிராமிய பாணியிலான வாழ்வியல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லட்சுமண் குமார் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் பசுபதி காவலராகவும், நடிகை ரோகிணி சடலமாகத் தோன்றுவது வித்தியாசமாக இருப்பதுடன், அங்கு பார்வையாளர்களாக வருகை தந்திருக்கும் கிராமத்து முதிய பெண்களின் காதுகளில் ‘தண்டட்டி’ எனப்படும் வயதான பெண்மணிகள் அணியும் தங்க ஆபரணத்துடன் தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

கதை பற்றி தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது : இந்த படம் கிராமத்து காமெடி படமாக உருவாகி உள்ளது. கிராமத்து வயது மூத்த பெண்ணான ரோகிணியின் காதில் தொங்கும் தண்டட்டி மீது எல்லோருக்கும் ஒரு கண். அவரும் அதை பற்றி பெருமையாக பேசித் திரிவார். ஒரு நாள் அவர் இறந்து விட அந்த தண்டட்டிக்கு யார் வாரிசு என்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதை தீர்த்து வைக்க போலீசான பசுபதி வருகிறார். இதை வைத்து காமெடியாக சொல்லும் படம். அதோடு கிராம மக்களின் வாழ்க்கையில் தங்கம் எந்த அளவுக்கு முக்கியத்தும் பெறுகிறது என்பதையும் பேசும் படம் என்கிறார்கள்.