“நான் நடிக்கவேயில்லையே”- பா. ரஞ்சித் பகிர்ந்த போஸ்டருக்கு மறுப்பு தெரிவித்த கெளதம் மேனன்

0
132

“நான் நடிக்கவேயில்லையே”- பா. ரஞ்சித் பகிர்ந்த போஸ்டருக்கு மறுப்பு தெரிவித்த கெளதம் மேனன்

கடந்த ஆண்டு வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றிக்குபிறகு தொடர்ந்து உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். சமீபத்தில், அவரது நடிப்பில் ‘ருத்ர தாண்டவம்’ வெளியானது. தற்போது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தினையும் இயக்கி வருகிறார். வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திலும் நடித்துள்ளார். இயக்குநர், உறுதுணை நடிகராக இருந்த கெளதம் மேனன் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கிறார் என்று இன்று அறிவிப்பு வெளியானது.

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் டைட்டிலும் வெளியானது. அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கும் இப்படத்திற்கு ‘அன்புச்செல்வன்’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

ஆனால், இப்படத்திற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். அவரது ட்விட்டர் பக்கத்தில், ” இது எனக்கு அதிர்ச்சியாகவும் புதிதாகவும் இருக்கிறது. நான் நடித்துள்ளதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் இயக்குனரையும் எனக்குத் தெரியாது. அவரை நான் சந்திக்கவுமில்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய ஆட்களை வைத்து ட்வீட் செய்திருக்கிறார். இதுபோன்ற ஒன்றை மிக எளிதாக செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது” என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். ’காக்க காக்க’ படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம்தான் ‘அன்புச்செல்வன்’ என்பது குறிப்பிடத்தக்கது.