’நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது… இனி போஸ்டர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும்…’ இரண்டாம் குத்து இயக்குநர் அறிக்கை

0
258

‘நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது… இனி போஸ்டர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும்…’ இரண்டாம் குத்து இயக்குநர் அறிக்கை

சில நாட்களுக்கு முன்பு வெளியான இரண்டாம் குத்து படத்தின் டீசரும் போஸ்டரும் எல்லை மீறிய ஆபாசத்துடன் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் வந்தன. இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா, அந்தப் படத்தின் டீசர் காட்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் அக்கறையுடனும் அறிக்கை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், அவரது விமர்சனத்துக்கு கடுமையாக மறுப்புத் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். தற்போது அவர், இயக்குநர் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டு டிவிட்டரில் கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

இக்கடிதத்தில்,  அறிக்கையைப் படித்துவிட்டு வந்த கனத்தின் வெப்பத்தில் எனது டிவிட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்கக்கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,  தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள். அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்துவிடமாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு பாரதிராஜா அவர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது என்றும் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது குத்து படத்தின் அடுத்துவரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிப்பதாகவும் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.