நாட்டிலேயே முதன் முறையாக அரசு சார்பில் ஓடிடி தளம்: – கேரளா அதிரடி

0
165

நாட்டிலேயே முதன் முறையாக அரசு சார்பில் ஓடிடி தளம்: – கேரளா அதிரடி

சினிமா வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் துணையாய் இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களுக்கு போட்டியா, கேரள அரசும் பிரத்யேக ஓடிடி தளத்தை தொடங்குது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், இந்த பிரத்யேக ஓடிடி தளம் இயங்க உள்ளது என கேரள மாநில கலாச்சாரம் மற்றும் சினிமாத்துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவிச்சிருக்கார். நாட்டிலேயே ஒரு மாநில அரசு நிறுவும் முதல் ஓடிடி தளம் இதுதான்!

இது பற்றி அமைச்சர் சாஜி செரியன் கூறுகையில், “இந்த ஓடிடி தளத்திற்கு சி ஸ்பேஸ் அப்படீன்னு பேரிட்டுள்ளோம். இது மாநில அரசின் கலை, கலாச்சாரம், சினிமாத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக்கழகம் இதை நிர்வகிக்கும். இதில் திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியான பின்பே வெளியிடப்படும். சினிமா திரையரங்குகளைக் காக்கும் பொறுப்பும் நமக்கு இருப்பதை உணர்ந்து இந்த தளத்தை உருவாக்கியுள்ளோம். இதனால் திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் கடுகளவுகூட பிரச்சினையை சந்திக்கமாட்டார்கள். இதில் குறும்படங்கள், ஆவணப்படங்களும் திரையிடப்படும். இதனால் குறும்படம், ஆவணப்படும் எடுக்கும் இயக்குநர்களுக்கும் திரையிட ஒரு மேடை கிடைக்கும்.

கொரோனா தொற்று காலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தமே 70 படங்கள் தான் மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியாகின. 85 படங்களுக்கு உரிய ஓடிடி தளம் கிடைக்காமல் நின்றது. கடன்வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்களின் நிலையோ, இன்னும் மோசமாகிவிட்டது. அதனால் தான் அரசின் ஓடிடி திட்டம் உருவானது. தயாரிப்பாளர்கள் இந்த ஓடிடி தளத்தில் பட வெளியீட்டிற்கு வரும் ஜூன் 1 முதல் கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக்கழகத்திற்கு விண்ணப்பிக்கலாம்” அப்படீன்னு சொல்லி இருக்கார்

கேரள அரசின் இந்த அறிவிப்பு சிறுபட்ஜெட் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது மாதிரி தமிழ்நாடு அரசு செய்யாதா? என்று கேட்ட போது , ‘தியேட்ட்டர் டிக்கெட் புக்கிங்-கிற்கு ஆன்லைன் புக்கிங் செய்யும் ஒரு ஆப் ரெடி ஆகி ஏன்? யாரால் முடங்கிச்சு? விசாரிச்சுப் பாருங்க- நாலு வாரத்துக்கான கவர் ஸ்டோரி கிடைக்கும்’ என்கிறார்கள் விபரமறிந்தோர்.