நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலி – சேதுமாதவன் குறித்து கமல் உருக்கம்

0
128

நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலி – சேதுமாதவன் குறித்து கமல் உருக்கம்

பிரபல மலையாள இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். பல மலையாள திரைப்படங்களை இயக்கிய அவர் தமிழிலும் சில படங்களை இயக்கியுள்ளார்.

குறிப்பாக 1962-ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசனை ’கண்ணும் காரலும்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய சேதுமாதவன், பின்னாளில் அவரை வைத்து ‘நம்மவர்’ என்ற படத்தையும் இயக்கினார். இதையடுத்து அரசியலுக்கு வந்த கமலுக்கு, அவருக்கு இருக்கும் பல அடைமொழி பெயரோடு இந்த நம்மவர் என்பதும் சேர்ந்துக் கொண்டது.

தவிர நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகை ராதா நடிப்பில் சேதுமாதவன் இயக்கிய மறுப்பக்கம் படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. தனது சிறந்த படைப்புகளுக்காக மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்றதன் மூலம் சேதுமாதவன் சினிமாவை எவ்வளவு நேசித்தார் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். இது குறித்த ட்விட்டர் பதிவில், “காலத்தால் அழியாத காவியங்களை திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச் சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.