நரிக்குறவர், இருளர்களுக்கு உதவி: தியா மற்றும் தேவ்வின் அம்மாவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி – ஜோதிகா

0
173

நரிக்குறவர், இருளர்களுக்கு உதவி: தியா மற்றும் தேவ்வின் அம்மாவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி – ஜோதிகா

தீபாவளியையொட்டி நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, மற்றும் சாதிச் சான்றிதழ்களை முதல்வர் முக.ஸ்டாலின் ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்து வரும் நரிக்குறவர், இருளர் மக்கள் நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்க கோரிக்க விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாின் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்ற நீங்கள் முடிந்தவரை சிறப்பாக உழைத்து வருகிறீர்கள். அதனை உடனடியாக செய்தும் வருகிறீர்கள். இது தலைமைப் பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்பதைக் காட்டுகிறது.

கல்வித்துறையில் நீங்கள் கொண்டுவரும் நேர்மறையான மாற்றம், ஒரு குடிமகளாக எனக்கும் சரி, அகரம் அமைப்பிற்கும் சரி கடந்த 16 வருடங்களில் பார்க்காதது.

குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு நீங்கள் வழங்கிய பட்டா, சாதி சான்றிதழ், மற்றும் அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை நம் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது.

முதலும் முடிவுமாக நாம் இந்தியர்கள் என்ற அம்பேத்கரின் வார்த்தையை நிஜமாக்கியதற்கு நன்றி. உங்களுக்கு ஒரு குடிமகளாக மட்டும் அல்ல, தியா மற்றும் தேவ்வின் அம்மாவாக எனது மரியாதையும் நன்றியும் கூறிக்கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CV2v5qsvEyZ/?utm_source=ig_embed&ig_rid=53b14433-bb3d-4e2e-b5b8-910f9c46f8c2

நடிகர் சூர்யா பாராட்டு

தீபாவளியையொட்டி நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, மற்றும் சாதிச் சான்றிதழ்களை முதல்வர் முக.ஸ்டாலின் ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதற்கு, பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், நடிகர் சூர்யா பாராட்டியிருக்கிறார்.

”முதல்வர் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.அன்புடன், சூர்யா” என்று நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

https://twitter.com/Suriya_offl/status/1456245112367828994