“நடிகர் விஜயின் சொகுசுகாருக்கு அதிகப்படியான அபராதம்.. எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” : ஐகோர்ட்!
நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசுகாருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய் இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ சொகுசுகாருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிம்டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400 சதவீத அளவிற்கு வணிகவரித் துறை அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே நுழைவு வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாதாகவும் , நுழைவு வரி செலுத்திய நிலையில், அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் எனவே அபராதம் விதிப்பது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். மேலும் இதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கோடு இந்த வழக்கின் சேர்ப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யுமாறு அரசு வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சனுக்கு உத்தரவிட்டுள்ளார்.