தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

0
170

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

” இந்தத் திரைப்படம் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் முதல் தயாரிப்பாகும். எம். எஸ். தோனி மற்றும் சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்காக படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்வும் நடைபெற்றது. இதன் போது படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாட்ட மனநிலையில் பகிர்ந்து கொண்டனர். படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் நாள் வரை முழு செயல்முறையும் விரிவான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

சுவராசியமான திரைக்கதை,  உணர்வுகளும், நகைச்சுவையும் கலந்து வித்தியாசமான சினிமா அனுபவத்தை ‘எல் ஜி எம்’ பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் விகாஸ் ஹசிஜா பேசுகையில், ” எல் ஜி எம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் உள்ளடக்கம் மற்றும் தயாரிப்பின் தரம் மேம்பட்டது” என்றார்.

படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான பிரியன்ஷூ சோப்ரா பேசுகையில், ” எல் ஜி எம் தமிழில் எங்களின் முதல் படமாக இருந்ததால், விரிவான திட்டமிடல் அவசியமானது. அதிர்ஷ்டவசமாக எங்களது அனைத்து திட்டமும் துல்லியமாக நிறைவேறின. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இந்த திரைப்படம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு விரைவில் வழங்குவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

‘எல் ஜி எம்’ திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. ” என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.