திறமையான மனிதர்கள் அமைதியாக இருப்பார்கள் – இயக்குநர் மாரி செல்வராஜ்
கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
’அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கேஜேஆர், கருணாகரன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ் பேசியதாவது,
”தமிழ் சினிமாவிற்கு ’அயலான்’ படம் ஒரு மைல் கல் படமாக இருக்கும். தெலுங்கு சினிமாவுக்கு எப்படி ’பாகுபலி’யோ, கன்னட சினிமாவுக்கு எப்படி ஒரு ’கேஜிஎப்’போ அதேபோல் சிஜியில் தமிழ் சினிமாவுக்கு ’அயலான்’ பெஞ்ச் மார்க்காக இருக்கும். இயக்குநர் ரவிக்குமார் உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பல கோடிகளை தாண்டி விட்டனர். நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள். நீங்கள் பவுடர், ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பி உள்ளீர்கள். இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 5ம் தேதி வெளியாகும். இப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி கடன் என்கின்றனர். அது எல்லாம் முடிந்துவிட்டது. இது ’அயலான்’ பொங்கல்” என்றார்.
அடுத்ததாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசும்போது, “ரவிக்குமார், விவேக் போன்ற புதிய தலைமுறை கலைஞர்களுடன் பணிபுரிந்து உள்ளேன். சிஜி என்றதும் பயம் வந்தது. ஆனால், இந்தப் படத்தில் சிஜி நன்றாக இருந்தது. இதற்காக ஐந்து மடங்கு வேலை செய்ய வேண்டி இருந்தது. இயக்குநர் ரவிக்குமார் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேலை செய்துள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே”.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது, “இயக்குநர் ரவிக்குமார் ஒரு நேர்மறையான ஆளுமை. ஒரு படத்தை வைத்துக்கொண்டு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறார். இந்த ஐந்து வருடத்தில் எந்தவித மாற்றமும் இன்றி இருக்கிறார். உங்க மனசுக்கு நல்லது நடக்கும். திறமையான மனிதர்கள் அமைதியாக இருப்பார்கள். சென்னை வந்தது முதல் நான் பழகிய ஆள் சிவகார்த்திகேயன். இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நான் பால் போட்டால் சிக்ஸர் தான். இவரால் தான் நான் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திவிட்டேன். தென் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு ரஹ்மான் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து அரிசி அனுப்பி வைத்தனர். அதுக்காக தென்மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன். கலைப்புலி தாணு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியோரும் அனுப்பினர். அவர்கள் இல்லை என்றால் அந்த மக்கள் இவ்வளவு விரைவாக மீண்டு வந்திருக்க மாட்டார்கள். சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை. நிச்சயம் அதற்கு வாய்ப்பு இருக்கு! கண்டிப்பாக அது நடக்கும்” என்றார்.