திரையரங்குகளில் கணிசமான வசூல்: வெற்றி பெற்ற பழைய படங்களை மறு வெளியீடு செய்ய திரையரங்க உரிமையாளர்கள் திட்டம்…?
திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய போதிலும் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இடையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மட்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதன் பின் வெளிவந்த எந்த படமும் சுமார் வெற்றியை கூட பெறாதது திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதேசமயம் அண்மையில் மறு வெளியீடு செய்யப்பட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கணிசமான வசூலை குவித்தது திரையரங்க உரிமையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இதனால் சுதாரித்துக்கொண்ட திரையரங்க உரிமையாளர்கள், வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து கல்லா கட்டும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் கடந்த வாரம் தமிழகம் முழுக்க 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டது. அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளிவராததால் பில்லா மறு வெளியீட்டை விமரிசையாக கொண்டாட காத்திருந்த அஜித் ரசிகர்கள் புது ரிலீஸ் படத்துக்கு இணையாக இப்படத்துக்கு ஓப்பனிங்கை கொடுத்தனர்.
இதைதொடர்ந்து சிம்புவின் மன்மதன் இந்த வாரமும், மாதவனின் மின்னலே திரைப்படம் அடுத்த வாரமும் மறு வெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக விஜய்யின் போக்கிரி, ரஜினி நடித்த ஹாலிவுட் படமான பிளட் ஸ்டோன், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களும் டிஜிட்டலுக்கு மாற்றம் செய்யப்பட்டு கூடிய விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.
திரையரங்க உரிமையாளர்களின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்னவென்று விசாரித்தபோது ஓடிடி-யின் அசுர வளர்ச்சி தமிழ் ரசிகர்களின் படம் பார்க்கும் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே தியேட்டருக்கு செல்ல தமிழ் ரசிகர்கள் விரும்புவதாகவும் சிறு பட்ஜெட் படங்களை ஓடிடி-யில் பார்க்கவே ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகின்றனர்.
இதன் காரணமாகவே சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ், எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் இருந்தபோதிலும் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வரவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளிவர காத்திருப்பதால் இந்த சூழல் மாறுமா?