தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் – தலைவராக ‘தேனாண்டாள்’ முரளி வெற்றி!

0
317

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் – தலைவராக ‘தேனாண்டாள்’ முரளி வெற்றி!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026ம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் கலைக் கல்லூரியில் 30-04-2023 அன்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இதில், தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியில் தலைவராக தேனாண்டாள் முரளி, துணைத் தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி போட்டியிட்டனர். இதேபோல் செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் போட்டியிட்டனர். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச் செயலாளர் பதவிக்கு சௌந்தரபாண்டியன் போட்டியிட்டனர்.

மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணியில் தலைவராக மன்னனும் துணைத் தலைவர்களாக மைக்கேல் ராயப்பன் மற்றும் விடியல் ராஜூ போட்டிட்டனர். செயலாளர்களாக கமீலா நாசர், தேனப்பன், பொருளாளர் பதவிக்கு ரவீந்தர், இணை செயலாளர் பதவிக்கு மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர்.

அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் வாக்களித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சசிகுமார், பிரகாஷ் ராஜ், தேவயானி, ஏ.ஆர்.முருகதாஸ், பாரதி ராஜா,மன்சூர் அலிகான்  உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த தேர்தலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ராதாரவி, மோகன், ராமராஜன், நாசர், பாகயராஜ், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்.வி.சேகர், ஆர்யா, ஸ்ரீகாந்த், சசிகுமார், சின்னி ஜெயந்த், டெல்லி கணேஷ், விக்னேஷ், விஷ்ணு விஷால், ராதிகா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தனர்.

இந்நிலையில் இந்த வாக்குகளை எண்ணும் பணி 01-05-2023 அன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனை விட 150 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 2-வது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பொருளாளராக முரளி அணியை சேர்ந்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தல் மூலம் 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் 2023 – 2026

தலைவர் : என்.இராமசாமி  615 வாக்குகள் பெற்று வெற்றி

செயலாளர்கள் : கதிரேசன் 617 வாக்குகள் பெற்று வெற்றி , ராதாகிருஷ்ணன் 502 வாக்குகள் பெற்று வெற்றி.  இருவரும் வெற்றி.

துணைத்தலைவர்கள் : தமிழ்குமரன் 651 வாக்குகள் பெற்று வெற்றி, அர்ச்சனா 588 வாக்குகள் பெற்று வெற்றி இருவரும் வெற்றி.

பொருளாளர் : S. சந்திரபிரகாஷ் ஜெயின் 536 வாக்குகள் பெற்று வெற்றி.

இணைச்செயலாளர் : 5-செளந்தரபாண்டியன் 511 வாக்குகள் பெற்று வெற்றி.

என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் தலைமையிலான நலம் காக்கும் அணியின் தலைவர், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர், இணைசி செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர்.