தமிழக அரசு தமிழ் காக்கும் அரசாக உஷாராக வேண்டும் –  இயக்குனர் பேரரசு

0
144

தமிழக அரசு தமிழ் காக்கும் அரசாக உஷாராக வேண்டும் –  இயக்குனர் பேரரசு

நாம் தமிழ்நாட்டில் வாழ்கிறோமா இல்லை வெளிநாட்டில் வாழ்கிறோமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது!
மக்கள் அன்றாடம் செல்லும் இடங்களான உணவகம், துணிக்கடை ,
விமான நிலையம் ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் பெரும்பாலும் தமிழர்கள் பணியில் இல்லை என்பது வேதனையான விஷயம்.
வட இந்தியர்களே அதிகமாக வேலை செய்கிறார்கள் என்பதும் மிக மிக வேதனையான விஷயம்.
ஓரளவு படித்தவர்கள் அவர்களுக்கு புரிய வைப்பதும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்வதும் மிகவும் சிரமமான நிலையில் படிக்காத பாமர மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
ஒரு கடைக்குச் சென்றால் வாடிக்கையாளர்களை அங்குள்ள பணியாளர்கள் அன்போடு வரவேற்று பணிவோடு என்னவேண்டும் என்று விசாரிப்பது முக்கியமாக நம் தமிழர்களின் பண்பாடாக இருந்து வந்தது, ஆனால் இப்பொழுது அந்த பண்பாடு புண்பட்டு இருக்கிறது.
ஒரு உணவகத்திற்கு சென்றால் நம் அருகே வட இந்தியர்கள் ரோபோ போல் வந்து நம் அருகில் நிற்க்கிறார்கள் என்ன இருக்கிறது என்று கேட்கும் பொழுது அவர்கள் எங்கேயோ பார்த்தபடி ஒரு லிஸ்டை சொல்லுகிறார்கள் நாம் அதில் என்ன வேண்டும் என்று சொல்லும்பொழுது அதற்கு எந்த ரியாக்சனும் இல்லாமல் குறிப்பு எடுத்து விட்டு நம்மை கடந்து செல்கிறார்கள்.
இது நமக்கு ஒருவித அவமானமாக தோன்றுகிறது.
அதேபோல் சில தங்கும் விடுதிகளுக்கு சென்று அறை புக் செய்யும் பொழுது அவர்கள் நம்மை ஒரு விசாரணைக் கைதி போல் விசாரிக்கிறார்கள்.
அது நமக்கு மிகவும் அவமானமாகவும் தோன்றுகிறது.
நாம் வீடு கட்டுகிறோம் அங்கே கட்டிட தொழிலாளர்களாக இருப்பது பெரும்பாலும் வட இந்தியர்கள். நம் கட்டிட வேலையை நாம் பார்க்கச் செல்லும் பொழுது நம்மிடம் சம்பளம் வாங்கும் அவர்கள் நமக்கு சரியான மரியாதை கொடுப்பதில்லை.
அதேபோல் விமான நிலையம் இது தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையமா? இல்லை மும்பையில் உள்ள விமான நிலையமா?
என்ற சந்தேகமும் வருகிறது விமான நிலையம் எல்லா மொழியினருக்கும் பொதுவானதுதான். ஆனால் இங்கே தமிழர்கள் இருக்க வேண்டாமா முக்கியமாக நுழைவாயில், அதிகமாக தமிழர்கள் செல்லும் நுழைவு வாயிலில் தமிழ் தெரிந்த ஒருவர் இருக்க வேண்டாமா வட இந்தியரும் இருக்கட்டும் கூடவே ஒரு தமிழரும் இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டில் எத்தனை தமிழர்கள் அந்த இடத்தில் திணறுகிறார்கள் பயப்படுகிறார்கள் அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று புரியாமல் தவிக்கிறார்கள் .
விமான நிலையத்தில் மட்டுமல்ல பல பொது இடங்களிலும் இன்று தமிழ்நாட்டில் இந்த நிலைமைதான்.
இந்தி திணிப்பு வேண்டாம்! இந்தி திணிப்பு வேண்டாம் !என்று நாம் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களை திணித்து கொண்டிருக்கிறோம் தமிழ்நாட்டில் தமிழில் பேச முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழை வளர்க்கிறோமோ இல்லையோ தமிழை
அழிந்து விடாமல்
காக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பது மிகப்பெரிய உண்மை.
நம் மொழியில் நமக்கு விழிப்புணர்வு வேண்டும்.
குறைந்த சம்பளத்திற்கு வட இந்தியர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்பதற்காக நாம் நம் தமிழ்நாட்டை அவர்களுக்கு அடகு வைத்து விடக்கூடாது!
தமிழ்நாட்டில் பொது இடங்களில் ஸ்தாபனங்களில் மக்களை தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக தமிழர்களாகத்தான்இருக்க வேண்டும்!
இந்த விஷயத்தில் நம் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தமிழ் காக்கும் அரசாக உஷாராக வேண்டும்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
பேரரசு