தன் மகனுக்கு வைத்துவிட்டு போகும் சொத்து பற்றி வெளிப்படையாக ‘சல்லியர்கள்’ பட விழாவில் பேசிய கருணாஸ்

0
107

தன் மகனுக்கு வைத்துவிட்டு போகும் சொத்து பற்றி வெளிப்படையாக ‘சல்லியர்கள்’ பட விழாவில் பேசிய கருணாஸ்

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “சல்லியர்கள் சாமானியர்கள் அல்ல.. சகாப்தம், சரித்திரம் படைக்கப் போகிறார்கள்..” என்று கூறினார்

தயாரிப்பாளர் சிவா கிலாரி பேசும்போது, “எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரிந்தாலும் இங்கே அண்ணன் சீமான் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. அதனால் தமிழில் தான் பேச போகிறேன். என் முதல் படம் ‘விசித்திரன்’. இரண்டாவது படம் ‘போகும் இடம் தூரம் இல்லை’. அதில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. படம் பற்றி கொஞ்சம் பாசிட்டிவாக எழுதினால் திரையரங்குகளுக்கு கூட்டம் வரும். திரையரங்குகளை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.

இயக்குநர் பொன்ராம் பேசும்போது, “இந்த விழாவிற்கு என்னை அழைப்பதற்காகவே படத்தை போட்டு காட்டினார்கள். அற்புதமான படைப்பு இந்த சல்லியர்கள். இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகைக்கு எத்தனை நாள் பயிற்சி கொடுத்தார்கள் என தெரியவில்லை, அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மண்ணை சார்ந்த உணர்வுபூர்வமான படம் இது. படம் என்று சொல்வதை விட ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது. போர் காட்சிகளும் முறையான பயிற்சி கொடுத்து படமாக்கப்பட்டது போல் தெரிகிறது” என்று கூறினார்.

தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது, :இயக்குநர் கிட்டு தனது முதல் படமான மேதகு படத்தையும் சிறப்பாக எடுத்திருந்தார். ஓடிடியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான படம் அது. இந்த படத்தையும் நான் பார்த்தேன். நல்ல தரமான படைப்பாக வந்திருக்கிறது. இதை ஒரு இலங்கை படம் என பாராமல் கன்னத்தில் முத்தமிட்டால் படம் போல ஒரு காதல் படமாக பாருங்கள். ஒரு இசையமைப்பாளராக கருணாஸின் மகன் கென் இன்னும் பக்குவப்பட்டவராக இருக்கிறார். அருமையாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்” என்று கூறினார்.

நடிகர் திருமுருகன் பேசும்போது, “நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் எனது மனதுக்கு நிறைவான படம். தம்பி கிட்டு ஆரம்பத்தில் எடுத்த குறும்படத்தில் நான் தான் நடித்தேன். ஆனால் மேதகு படத்தில் நடிக்க முடியவில்லை. கிட்டு தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கியமான படைப்பாளி. மேதகு படத்தை விட சல்லியர்கள் மிகப்பெரிய வெற்றி பெறும். சல்லியர்கள் யுத்த களத்தில் நடக்கின்ற ஒரு படம். ஆனால் பார்வையாளர்களை பொருத்தவரை அது ஒரு ஹீரோ வில்லன் படம் தான். முழு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம். ஒரு அரக்க கூட்டத்திற்கும் அறத்துடன் நிற்கும் கூட்டத்திற்கும் இடையில் நடக்கிற கதை இது. வெகு ஜன ரசிகராக நீங்கள் இருந்தால் 100% இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். தமிழ் உணர்வாளர்களாக இருந்தால் ஆயிரம் முறை உங்களுக்கு பிடிக்கும். இந்த படைப்பை மிகப்பெரிய அளவில் கொண்டு வந்ததற்கு காரணம் கருணாஸ் அண்ணன் தான். இந்த படம் அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றியை கொடுக்கும். யுத்த களத்தை மையப்படுத்திய வெளிநாட்டு படங்களை பார்க்கும் நம்மவர்களுக்கு ஏன் நம்மூரில் இப்படி ஒரு படம் வருவதில்லை என்கிற ஏக்கம் இருக்கும். அப்படி நம் ஊரில் போர்க்களத்தை மையப்படுத்தி வந்த படங்களில் இந்தப் படம் தான் ஆகச்சிறந்த படமாக இருக்கும்” என்று கூறினார்.

நார்வே நாட்டில் நார்வே திரைப்பட திருவிழாவை பல வருடங்களாக நடத்தி வரும் வசீகரன் பேசும்போது, “அகிம்சை ஏந்தி போராடிய எங்கள் இனம் ஆயுதம் ஏந்தி போராடிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்று அறிவாயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடந்த 14 ஆண்டுகளில் எம் இனம் விழுந்து கிடந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சினிமா என்னும் ஊடகத்தின் ஊடாக சரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்ற 10 நோக்கங்களில் ஒரு நோக்கத்திற்காக நார்வே திரைப்பட விழா 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் வலிகளை பேசுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழர்களின் அடையாளம் என்றால் அந்த சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அப்படிப்பட்ட படங்களை தான் கடந்த 14 வருடங்களாக நாங்கள் தேர்வு செய்து வருகிறோம். அந்த வகையில் தம்பி கிட்டு மேதகு திரைப்படத்தை கலைக்கூத்து வழியாக அழகான கதை நகர்த்தல் மூலம் சொல்லி இருந்தார். தமிழகமாக இருந்தாலும் தமிழீழமாக இருந்தாலும் போதை வஸ்து, வன்முறை கலாச்சாரம் இவற்றை விதைக்கும் விதமாகத்தான் படங்கள் வருகின்றன என்பது வருத்தமாக இருக்கிறது, சல்லியர்கள் போன்ற படங்கள் தமிழகத்திலும் சரி, வெளிநாட்டிலும் சரி வெளியாவதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி இந்த படத்தை வெளிக்கொண்டு வருவோம்” என்று கூறினார்.

நடிகர் சேது கருணாஸ் பேசும்போது, “இந்த படத்தை எடுக்க வேண்டும் என கிட்டு முடிவு செய்தபோது என்னிடம் பரமக்குடியை சேர்ந்த இராவணனை அழைத்து வந்தார். பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் இல்லாதவர். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து துவக்கி வைத்தவர் இவர்தான். இப்படி சாதாரண கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கே இந்த உணர்வு இருக்கும்போது, சினிமாவில் இருக்கும் எனக்கு இந்த மொழியால், இனத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏதாவது செய்யக்கூடாதா என்கிற வெறி ஏற்பட்டது. தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு நான் உங்களுடன் உறுதுணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஒரு உத்வேகத்தை கொடுத்து இந்த நிமிடம் வரை எனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தம்பி கரிகாலனுக்கு இந்த நேரத்தில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டு இயக்கிய ‘மேதகு’ படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படம் பண்ணும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையும் சரியாக பண்ணியிருக்கிறார். அவர் என்ன கேட்டாரோ ஒரு தயாரிப்பாளராக அதை சிறப்பாக நான் செய்து கொடுத்திருக்கிறேன். அவரும் இந்த படத்திற்கு நேர்மையாக, உண்மையாக உழைத்திருக்கிறார், பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனைக்குரிய, ஒரு இன அழிப்பை பற்றிய வரலாற்று பதிவாக பண்ண வேண்டும் என்று சொல்லி, அதை படமாக எடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தை எடுத்ததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், என்னுடைய மகன் கென் தான். இந்த படத்திற்கு அவன் தான் இசையமைத்திருக்கிறான். ஆனால் என் பையன் என்னிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் இவ்வளவு வறண்ட, இவ்வளவு சீரியஸான, இந்த மாதிரியான ஒரு படத்தை இப்போ கஷ்டப்படுகிற நேரத்தில் எதற்காக காசு செலவு பண்ணி எடுக்கிறீர்கள் என்று கேட்டான். காதலிக்கும்போது கூட மண், இனம், மொழி என்று தான் பேசுகிறார்கள், இதையெல்லாம் யார் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள் என்றான்.

அவனிடம் இது நடந்த காலகட்டம் அப்போது.. போராளிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. நானும் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்.. ஆனால் அந்த காதலில் கூட அவர்களிடம் ஒழுக்கமும் அறமும் இருந்தது. அது உங்களுக்கு புரியவில்லை. 21 வயது பையன் உனக்கே புரியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு இது சுத்தமாக தெரியாமல் போய்விடுமே என்பதற்காகத்தான் இந்த படத்தை எடுத்தேன்.. அப்பா உனக்காக காசு பணம் நிறைய சேர்த்து வைக்கவில்லை என வருத்தப்படாதே.. எதிர்காலத்தில் நடிகராகவோ, ஏதோ ஒரு இடத்தை பிடித்து விடுவாய். அப்படியே ஆனாலும் கூட வரக்கூடிய காலங்களில் நடிகர் கருணாஸின் பையன், எம்எல்ஏ கருணாஸின் பையன் என்று சொல்வதை விட சல்லியர்கள் என ஒரு படத்தை எடுத்தானே அவனுடைய பிள்ளை என்கிற ஒரு அடையாளத்தை உனக்கு நான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த படத்தை எடுத்தேன். இதுதான் நான் உனக்கு கொடுக்கும் சொத்து என்றேன். உண்மையிலேயே அந்த உணர்வில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். எல்லோரும் நமக்கென்ன என்று போய்விட்டால் வேறு யார் தான் செய்வது? நம் தமிழகம், நம்ம ஊர்.. இந்த ஊரில் எல்லோரும் வாழலாம்.. ஆனால் நம்மை ஆள்பவன் தமிழனாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; சேது கருணாஸ் & கரிகாலன்

இணை தயாரிப்பு ; சாத்தனூர் சிவா

இயக்கம் ; கிட்டு

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

இசை , கென்-ஈஸ்வர்

படத்தொகுப்பு ; சி,எம் இளங்கோவன்

கலை இயக்குனர் ; முஜிபூர் ரஹ்மான்

ஆக்சன் ; எஸ்.ஆர்.சரவணன்

விஎப்எக்ஸ் ; விக்னேஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்