தனுஷின் ‘வாத்தி’ படத்தில் இணைந்த ‘அசுரன்’ பட பிரபலம் – வெளியான தகவல்

0
69

தனுஷின் ‘வாத்தி’ படத்தில் இணைந்த ‘அசுரன்’ பட பிரபலம் – வெளியான தகவல்

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தில், கருணாஸின் மகன் கென் கருணாஸ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘தோழி ப்ரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’, ‘ரங் தே’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படுகிறது. தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷுடன், நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏயுமான கருணாஸின் மகன், கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில், தனுஷின் இளைய மகனாக நடித்திருந்தார் கென் கருணாஸ். இந்தப்படத்தில் கென் கருணாஸின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தது.

தற்போது ‘வாத்தி’ படத்தின் மூலம் இரண்டாவது முறையாக நடிகர் தனுஷுடன், கென் கருணாஸ் இணைந்துள்ளார். நடிகர் தனுஷ் ‘வாத்தி’ படம் மட்டுமின்றி, செல்வராகவனின் ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவஹரின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.