டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் தனுஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

0
97

டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் தனுஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

தனுஷ் நடிப்பில் இந்த வருடம் கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. மாஸ்டரைத் தொடர்ந்து கர்ணனும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. வாங்கியவர்கள், திரையிட்டவர்கள் என அனைவரும் லாபம் சம்பாதித்தனர். படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த போதே கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட, கர்ணனை ஓடிடியில் வெளியிட்டனர். ஓடிடியிலும் மகத்தான வரவேற்பு கிடைத்தது.

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. கர்ணனுக்கு திருஷ்டிபரிகாரமாக அமைந்தது ஜகமே தந்திரம். படம் எந்தத் தரப்பையும் கவரவில்லை. இதையடுத்து தனுஷ் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் அத்ரங்கி ரே. இந்திப் படம்.

ராஞ்சனா மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் அத்ரங்கி ரே படத்தை இயக்கியுள்ளார். சாரா அலிகான் நாயகி. இன்னொரு நாயகனாக அக்ஷய் குமார் வருகிறார். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என இரு தினங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். அது உறுதியாகியிருக்கிறது.

படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது. டிசம்பர் 24 கிறிஸ்மஸுக்கு முதல்நாள் படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுகின்றனர். தமிழுக்கான டப்பிங்கை தனுஷ் பேசி முடித்துள்ளார். நாளை ட்ரெய்லர் வெளியாகிறது.

ஜகமே தந்திரம், அத்ரங்கி ரே படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் தி க்ரே மேன் ஹாலிவுட் படமும் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாறன் படத்தையும் ஓடிடியில் வெளியிட முயற்சிகள் நடக்கிறது.