சோனி லைவின் தமிழ் ஹெட்டான பாஃப்டா மீடியா வொர்க்ஸ் தனஞ்செயன்!

0
157

சோனி லைவின் தமிழ் ஹெட்டான பாஃப்டா மீடியா வொர்க்ஸ் தனஞ்செயன்!

தயாரிப்பாளர் தனஞ்செயன் சோனி லைவ் ஓடிடி தளத்தின் தமிழ்நாடு கன்டென்ட் ஹெட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்புத்துறையில் பல வருட அனுபவம் பெற்றவர் தனஞ்செயன். மோசர்பேர் நிறுவனம் தமிழில் திரைப்படங்கள் தயாரித்த போது அதன் தலைமைப்பொறுப்பில் இருந்து அவர்தான் கவனித்துக் கொண்டார். வெள்ளித்திரை, ராமன் தேடிய சீதை, கண்டேன் காதலை, அவள் பெயர் தமிழரசி, சித்து + 2 உள்பட பல படங்களை மோசர்பேர் தயாரித்து, பிறகு திவாலாகி படத்தயாரிப்பிலிருந்து விலகியது.

யுடிவி நிறுவனம் தமிழில் படங்கள் தயாரிக்க திட்டமிட்டபோதும், அதன் நிர்வாகப் பொறுப்பு தனஞ்செயனுக்கு அளிக்கப்பட்டது. தெய்வத்திருமகள், முரண், வேட்டை, கலகலப்பு, முகமூடி, தாண்டவம் சேட்டை, அஞ்சான், சிகரம் தொடு, புறம்போக்கு, யட்சன் என பல படங்களை நேரடியாக தயாரிக்கவும், பல படங்களை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து வெளியிடவும் செய்தது. பிறகு ஒருகட்டத்தில் யுடிவியும் பெரும் நஷ்டமடைந்து தமிழ் தயாரிப்புகளை நிறுத்தியது.

அதன் பிறகு பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பாக தனஞ்செயன் சொந்தமாக படங்களை விநியோகிக்கவும், நேரடியாக தயாரிக்கவும் ஆரம்பித்தார். மிஸ்டர் சந்திரமௌலி, காற்றின் மொழி, கபடதாரி ஆகியவை அவர் தயாரிப்பில் வெளிவந்த படங்களாகும்.

தற்போது ஒடிய மொழி படம் ஒன்றின் உரிமையை வாங்கி தமிழில் தயாரித்து, இயக்கி வருகிறார். இதன் திரைக்கதையை இயக்குனர் ராம் எழுதியுள்ளார்.

பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் தனது தமிழ் கன்டென்ட் ஹெட்டாக தனஞ்செயனை நியமித்துள்ளது. நரகாசூரன், கடைசி விவசாயி, வாழ் ஆகிய படங்களை முதல்கட்டமாக நேரடியாக ஓடிடியில் வெளியிட சோனி லைவ் வாங்கியுள்ளது. மேலும் பல புதிய படங்களை வாங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.