செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ்…!

0
115

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ்…!

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது ‘எல் ஐ சி’ ( LIC – LOVE INSURANCE CORPORATION).

இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் E ராகவ் எடிட்டிங் செய்கிறார். உடை வடிவமைப்பை பிரவீன் ரஜா செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார்.

லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ( LOVE INSURANCE CORPORATION) அதாவது சுருக்கமாக எல்.ஐ.சி (LIC ), இந்த தலைப்பு தன்னுடையது என இயக்குநரும் இசையமைப்பாளருமான எஸ்.எஸ். குமரன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இப்படம் புதிய பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது. அதாவது எல்.ஐ.சி என பெயர்வைக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு எல்.ஐ.சி நிறுவனமே தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

அது தொடர்பாக பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள எல்.ஐ.சி நிறுவனம், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரியுள்ளது. படத்திற்கு எல்ஐசி பெயரை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் மீது மக்களும் வாடிக்கையாளர்களும் கொண்டிருக்கும் நன்மதிப்பை குறைக்கும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நோட்டீஸ் பெற்றுக்கொண்ட 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றவில்லை என்றால், உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் படத்தின் பெயரில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.