சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்: தலைமை நீதிபதி சாஹிக்கு முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம்
சென்னை, நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்
உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்தார். இதனிடையே நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், “4 மாணவர்கள் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.