சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் பாடல் எழுதியுள்ள சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் ‘செல்லம்மா செல்லம்மா’, ‘ஓ பேபி’ பாடல்களை எழுதியுள்ளார். அடுத்ததாக சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் பாடல் எழுதியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று எதற்கும் துணிந்தவன் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்தது. வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் படம் வெளியாகிறது. படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் பாடலாசிரியர்கள் பெயர்களில் யுகபாரதி, சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக, சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்தார் இயக்குநர் பாண்டிராஜ். டப்பிங் பணிகளும் துவங்கியுள்ளன. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். வில்லனாக வினய் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.