சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு

0
218

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. ஸ்ரீநிவாஸ் என்பது இவரது பெயராக இருந்தாலும் அந்த பெயரில் இன்னும் சில நடிகர்கள் இருப்பதால் சேத்தன் சீனு என மாற்றிக்கொண்டார்.

சேத்தன் சீனுவின் பூர்விகம் தெலுங்கு என்றாலும் இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். சிறுவயதிலேயே இவருக்கு சினிமா ஆர்வத்தை ஏற்படுத்தியது இவரது தந்தை தான்.. அந்த சமயத்தில் அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமா மீதான கனவு அப்போதே துவங்கி விட்டது என்கிறார் சேத்தன் சீனு.

ஜூனியர் என்டிஆர் நடனம் கற்றுக்கொண்ட அதே மாஸ்டரிடம் நடனத்தையும் பாண்டியன் மாஸ்டரிடம் சண்டையையும் கற்றுக்கொண்ட சேத்தன் சீனு, அப்படியே மாடலிங் பக்கம் கவனத்தை திருப்பினார். மாடலிங் மூலமாக விளம்பரப்பட வாய்ப்புகள் வரவே, கார்னியர், சாம்சங், டாமினோஸ், ஜாய் ஆலுக்காஸ் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஷாருக்கான், மாதவன் ஆகியோர் டெலிவிஷன்களில் நடித்து அதன்மூலம் திரையுலகில் நுழைய காரணமாக இருந்த மும்பையில் உள்ள பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்திலும் கொஞ்சநாள் பணியாற்றினார்..

அப்படியே சினிமாவுக்கென முழுதாக தயாரான சமயத்தில் தான், கருங்காலி படத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு இயக்குனர் மு.களஞ்சியம் மூலமாக சீனுவின் வீட்டுக்கதவை தட்டியது.. அதை தொடர்ந்து இவரை அழைத்து நான் சிவப்பு மனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் நடிகர் விஷால்.

இந்த படங்களின் மூலம் கிடைத்த வரவேற்பால் தெலுங்கில் அடியெடுத்து வைத்ததும் அங்கே முதல் படமாக நடிகை சார்மி கதாநாயகியாக நடித்த மந்த்ரா-2 என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

“ஏற்கனவே ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் அது.. அதுவும் ஹிட் தான்.. சார்மியை பார்க்கும்போதெல்லாம் ஒரு அயன் லேடி போலத்தான் எனக்கு தோன்றும். நடிகையாக இருந்து இப்போது தயாரிப்பாளராக மாறி அனைத்து வேலைகளையும் கவனிப்பது சாதாரண விஷயம் அல்லவே..

தெலுங்கில் மந்த்ரா-2 படத்தை தொடர்ந்து, நான் நடித்த படம் தான் ராஜூ காரி கதி.. மூன்று கோடியில் தயாரான இந்தப்படம் 18 கோடி வசூலித்து மிகப்பெரிய ஹிட் ஆனது.

“இந்தப்படத்தில் ஒரே கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தேன்… அதற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. மேலும் சுனைனா கதாநாயகியாக நடித்த பெல்லிக்கி முந்து பிரேமகதா என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்தேன். அதை தொடர்ந்து சில வாய்ப்புகள் தேடி வந்தாலும் கூட, நல்ல கதைகளுக்காக காத்திருந்தேன்.

புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் உருவாக்கி வரும் பான் இந்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். அந்தப்படத்தில், ஹீரோவாக நடித்துள்ளேன்..

இந்தப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள சித்தி இத்னானியும் ஒருவர். அவர்தான் படத்தில் எனக்கு பிரதான ஜோடியாக நடித்துள்ளார். சுகாசினி, ஸ்ரீகாந்த், விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போதும் எனது முதல் பட கதாநாயகி அஞ்சலியுடன் நல்ல நட்பு தொடர்கிறது. காவேரி கல்யாணி இயக்கிய படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க அஞ்சலியை கேட்டோம். சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.. ஆனால் கோவிட் காரணமாக அவர் நடித்துவந்த படங்களின் தேதிகள் மாறியதால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை..

இதுதவிர தெலுங்கு, மற்றும் தமிழில் உருவாகி வரும் வித்யார்த்தி என்கிற படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் இதன் டைட்டில் பரிசீலனையில் உள்ளது. ஆணவக்கொலையை மையப்படுத்தி உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளது இதுவும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இந்த இரண்டு படங்களும் தமிழிலும் வெளியாவதால் இதன்மூலம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு திரும்புகிறேன். அதுமட்டுமல்ல, தற்போது ஆஸ்திரேலிய தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பில் தமிழில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன்….

கோவிட் காலகட்டத்தில் நிறைய ஒய்வு நேரம் கிடைத்தது. அந்த சமயத்தில் விஸ்காம் ஸ்டூடன்ட் ஆன என்னுடைய தங்கையுடன் இணைந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்திற்காக போராடிய வி.வி.எஸ்.ஐயர், சத்ரபதி சிவாஜி, வேலுத்தம்பி தலவா, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் என 12 சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை ஆக்டர் என்கிற பெயரில் ஆந்தாலாஜி படமாக எடுக்கலாம் என முடிவு செய்து 12 எபிசோடுகளுக்கான கதைகளையும் நானும் என் தங்கையும் இணைந்து உருவாக்கியுள்ளோம்…

அதாவது அவர்களது வாழ்க்கையில் நடந்த, முக்கியமான, அவர்கள் மிக தீரமாக எதிர்கொண்ட ஒரு விஷயத்தை மையமாக வைத்து, இருபது நிமிடங்கள் என்கிற அளவில் ஒவ்வொருவரின் எபிசோடையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்…

அதற்கு முன்னதாக வேலு நாச்சியார் உட்பட இந்த 12 கதாபாத்திரங்களிலும் நானே நடிக்கிறேன் என்பதால் இதற்காக கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக எனது உடல் எடையை ஏற்றி இறக்கி, முடியை ஒவ்வொரு கதாபாத்திரத்திரும் ஏற்றாற்போல் வளர்த்து அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி, ஒவ்வொரு எபிசோடுக்கான பைலட் சூட்டையும் நடத்தி முடித்துள்ளோம்..

இந்த கதைகளை அழகாக திரைக்கதை அமைத்து வடிவமைத்து தரும்படி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களுக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத்தை அணுகியுள்ளோம்.. அவரை நேரில் சந்திக்கும்போது நாங்கள் உருவாக்கிய கதையுடன் இந்த பைலட் காட்சிகளையும் அவரிடம் காட்ட இருக்கிறோம். முழுமையான திரைக்கதை கிடைத்தவுடன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

இதுதவிர இந்த 12 கதாபாத்திரங்களில் நடிக்கும் எனது 12 விதமான தோற்றங்களை கொண்டு ஒரு அழகான காலண்டர் ஒன்றை வடிவமைக்கும் யோசனையும் மனதில் இருக்கிறது.. இந்த படமும் இந்த காலண்டரும் கூட நாளை எனக்கான புதிய வாசலை திறந்துவிட கூடும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. .

எனது தந்தை வாஹினி நிறுவனத்தில் பணியாற்றிய சமயத்தில் ரஜினி சாரின் உழைப்பாளி, கமல் சாரின் நம்மவர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தசமயத்தில் அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன்.. அவர்கள் இருவரையும் அவர்களது கடின உழைப்பையும் நடிப்புக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் தான் இன்ஸ்பிரேஷனாக மனதில் கொண்டுள்ளேன்.. தசாவாதாரம் பார்த்து பிரமித்தவன் நான். இந்த ஆக்டர் ஆந்தாலாஜி படத்தை உருவாக்குவதற்கு கமல் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.. இதை எடுத்து முடித்ததும் கமல்-ரஜினி இருவரிடம் இந்தப்படத்தை காட்ட விரும்புகிறேன்.

நடிகர் விஜய்சேதுபதி போல எந்த கதாபாத்திரம் என்றாலும் நடிக்க கூடிய ஒரு நல்ல நடிகராகவே என்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.. எல்லோருக்கும் ஒரு நேரம் வரும்.. ஒரு வெள்ளிக்கிழமை காலை ஷோ ஒரு நடிகரின் தலையெழுத்தையே மாற்றி அவரை ஸ்டார் ஆக்கிவிடும்.. எனக்கென ஒரு வெள்ளிக்கிழமை நிச்சயம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் விடாமுயற்சி செய்து வருகிறேன்” என தனது மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசினார் சேத்தன் சீனு..