சிவாஜி கணேசன் பிறந்தநாள்- மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

0
133

சிவாஜி கணேசன் பிறந்தநாள்- மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் அங்கு சென்று மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரை சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் ஒவ்வொரு புகைப்படங்களையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருக்கு கவிஞர் வைரமுத்துவும், பிரபுவும் புகைப்படங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., மயிலை வேலு எம்.எல்.ஏ., சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகர் பிரபு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஏராளமான நடிகர், நடிகைகள் சிவாஜியின் மணிமண்டபத்துக்கு வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.