சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்: இதயங்களை வெல்லும், உள்ளங்களை கொள்ளை கொள்ளும் பயணம்
ஏஆர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்து சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட்.
இதில் அசோக்செல்வன், ரியா, மணிகண்டன், அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே.எஸ்.ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமா குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ரதன், ஒளிப்பதிவு-மெய்யந்திரன்.கே, எடிட்டிங்-பிரசன்னா ஜி.கே, வசனம்-மணிகண்டன்.கே, கலை இயக்குனர்-ஏ.பெலிக்ஸ் ராஜா, மனோஜ்குமார், நடனம்-தினேஷ், ஸ்ரீகிரிஷ், பாடல்கள்-சினேகன், ஆர்.ஜெ.விஜய், மாதேவன், ராகேண்டு; மௌலி, எம்.சி.சேத்தன், உடை-பிரியா ஹரே, பிரியா கரன், பிஆர்ஒ-நிகில்.
செல்போன் கடையில் வேலை செய்யும் அசோக்செல்வன், அதே கடையில் வேலை செய்யும் ரியாவை காதலிக்க பெற்றோரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தாயில்லா பிள்ளை என்பதால் நாசர் மகன் அசோக்செல்வனை பாசத்துடன் கவனிக்கிறார். அசோக்செல்வனுக்கு தந்தை மீது பாசம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் தான் நினைத்ததையும், சொல்வதையும் தான் தந்தை கேட்கவேண்டும் என்ற அதட்டலும் உருட்டலுமாகத்தான் கண்டிஷன் போட்டு செல்லும் குணம். திருமண பத்திரிக்கை தயார் நிலையில் இருக்க, அதை நல்ல நாள் பார்த்து உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்று நாசர் மகனை ஆசையோடு அழைக்கிறார். ஆனால் அசோக்செல்வன் ஒரு வாரம் கழித்து கொடுக்கலாம் வேலை இருக்கிறது என்று சொல்லி விட்டுச் செல்கிறார். அதனால் மகனிடம் சொல்லாமல் நாசர் பத்திரிக்கை கொடுக்க செல்கிறார். இறுதியாக நண்பன் இளவரசு வீட்டில் பத்திரிக்கையை கொடுக்கும் போது இரவு நேரம் என்பதால் தன் வீட்டில் அருகே இருக்கும் மணிகண்டனை அழைத்து நாசரை பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு வருமாறு இளவரசு சொல்கிறார்.
மணிகண்டன் தனியார் தங்கும் விடுதியில் அறைகளை பராமரிக்கும் வேலையில் இருக்கிறார். பல வருடங்கள் அதே இடத்தில் வேலை செய்தாலும் எந்த ஒரு முன்னேற்றமும், சம்பளமும் உயரவில்லை என்ற புலம்பலுடன் ஏனோ தானோவென்று வேலைகளை முடித்து விரக்தியில் இருக்கிறார். அங்கே மேனேஜர் பதவிக்கு விண்ணப்பித்தும் கிடப்பில் போடப்படுகிறது. இந்த மனஉளைச்சலில் இருக்கும் மணிகண்டனுக்கு, திருமணம் செய்து கொள் என்று தாயின் நச்சரிப்பும் சேர்ந்து கொள்கிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும் மணிகண்டன் இளவரசு சொன்னதால் நாசரை அழைத்துக் கொண்டு பைக்கில் செல்கிறார். ஏதோ நினைப்பில் அவரமாக செல்லும் மணிகண்டன் பாதி வழியில் நாசரை இறக்கிவிட்டு பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து செல்லுமாறு சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அப்பொழுது வேகமாக காரை ஒட்டி வரும் பிரவீன் ராஜா நாசர் மேல் மோதி விடுகிறார்.
பணத்தால் எதையும் சாதிக்கலாம், வாங்கலாம் என்று மிதப்பில் திரியும் ஐடியில் வேலை செய்யும் பிரவீன் ராஜா இன்னும் மூன்று நாளில் வேலைக்கு சேர அமெரிக்கா செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். மாமனார், மாமியாரிடம் அமெரிக்கா செல்வதை தெரிவித்துவிட்டு தன் மனைவி ரித்விகா மற்றும் குழந்தையுடன் காரில் திரும்பும் போது மனைவியிடம் சண்டை போட்டு பேசிக் கொண்டு இருக்கும் போது தான் நாசர் மேல் மோதி விட்டு பயந்து காரை நிறுத்தாமல் சென்று விடுகிறார். அந்த இடத்தில் நாசர் அடிபட்டு இறந்து கிடக்க, அதன்பின் அந்த வழியே வரும் புதுமுக இயக்குனர் அபி ஹாசன் நாசரின் நிலையை பார்த்து காரை நிறுத்தி கிழே இறங்கி பார்க்கிறார்.
பிரபல இயக்குனராக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் அபி ஹாசன். தன் தந்தையின் அடையாளத்தை வைத்து பிரபலமாக விரும்பாத குணம், அதனால் தந்தையை எடுத்தெரிந்து பேசி, அவமதிப்பது மட்டுமில்லாமல் தானே தந்தையின் தயவு இல்லாமல் நடிகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடத்தி தந்தையை அங்கேயே அவமானப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சியால் சோசியல் மீடியாவிலும், டிவியிலும் சர்ச்சையில் சிக்குகிறார் புதுமுக நடிகர் அபிஹாசன். ஒரு விருந்தில் கலந்து கொண்டு காரில் திரும்பும் போது தான் நாசர் இறந்து கிடப்பதை பார்க்கிறார். அப்பொழுது அங்கே சத்தத்தை கேட்டு வரும் பொதுமக்கள், அபிஹாசன் தான் நாசரை இடித்து விட்டு கொன்று விட்டார் என்று நினைத்து காரை வழிமறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கின்றனர்.
அசோக்செல்வன் தந்தையை காணமால் தேடிக்கொண்டிருக்க இறந்த செய்தி கேட்டு இடிந்து போகிறார்.மணிகண்டன் நண்பனை பார்த்து விட்டு திரும்பி வரும் போது தான் நாசர் இறந்து கிடக்கிறார் என்பதையறிந்து குற்ற உணர்ச்சியில் அதிர்ச்சியாகிறார். பிரவீன்ராஜா பணத்தால் நாசரின் உயிரை மீட்க முடியாது, தண்டனையிலிருந்தும் தப்ப முடியாது, வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்து நொருங்கிபோகிறார். அபிஹாசன் ஏற்கனவே மீடியாவில் சர்;ச்சையில் இருக்க, இந்த விபத்து அவரது கனவையும், நடிகனாகும் ஆசையும் புரட்டிப் போடுகிறது. இந்த விபத்தால் பாதிக்கப்படும் நால்வரும் எவ்வாறு தங்கள் தவறை உணர்ந்து திருந்தினார்கள்? வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்துக் n;காள்கிறார்கள்? என்பதை சொல்லும் நிதர்சனமாக கதைக்களம்.
தந்தையாக நாசர் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை இவரைச் சுற்றியே நடப்பதால் இருந்தும் சரி , இறந்தும் சரி அனைத்து காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பால் நடுத்தர தந்தையின் பாசத்தையும், அறிவுரையும், ஆறுதல் வார்த்தைகளும் அனைவருக்கும் பொறுந்தும்படி வாழ்ந்திருக்கிறார். பாராட்டுக்கள்.
நாசர் மகன் விஜய்யாக அசோக்செல்வன் கோவத்திலும், பாசத்திலும் உச்சம் காட்டும் கதாபாத்திரம், அதட்டலிலே தந்தையை மிரட்டுவதும், பின்னர் அவரை தேடி அலையும் காட்சியும், காதலியிடம் தன் செய்கைக்கு திட்டு வாங்குவதிலும், தன்னால் தான் தந்தைக்கு இந்த நிலைமை என்பதை உணர்ந்து வருந்துவதும் இறுதியில் மன்னிப்பு கேட்க வரும் பிரவீன் ராஜாவை மன்னித்து அரவணைக்கும் காட்சியிலும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.
ராஜசேகராக மணிகண்டன் வேலையில் முன்னேற முடியாத மனஉளைச்சல், தன்னைப் பற்றியே சிந்தித்து தன் முன்னே நடப்பதை கண்டு கொள்ளாமல் எரிச்சலில் எடுக்கும் முடிவு எதிர் விளைவாக இருக்க அதிலிருந்து மீள போராடும் இடங்களில் காட்டும் தவிப்பை உணர்த்துவதில் வெற்றியும் பெறுகிறார். இந்தப் படத்தின் வசனத்திலும் முத்திரை பதித்துள்ளார் மணிகண்டன் வெல்டன்.
பகட்டான வாழ்க்கை வாழ நினைத்து பதட்டத்தில் முடியும் பிரவீன்ராஜா, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி எடுத்தெரியும் வார்த்தைகளால் அள்ள முடியாத வெறுப்பை சம்பாதிக்கும் அபிஹாசன், ரியா, ரித்விகா வலுவான வலிமையான தைரியமாக மனதில் பட்டதை பட்டென்று சொல்லி தப்பை புரிய வைக்கும் கதாபாத்திரங்கள், அஞ்சு குரியன், நாசர், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமா குமார் ஆகியோர் சிறிய ரோல் என்றாலும் ஜொலிக்கிறார்கள்.
பிரவீன் ராஜாவின் வக்கீல் நண்பரும், அசோக்செல்வனின் நண்பரும் இயல்பாக சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்திற்கு பக்கபலமாக ரதனின் இசையும், மெய்யந்திரன் ஒளிப்பதிவு இரு துருவங்களாக இருந்து கதைக்களத்தை வித்தியாசப்படுத்தி கொடுத்து அசத்தியுள்ளனர்.
ஏ.பெலிக்ஸ் ராஜா, மனோஜ்குமார் ஆகிய இருவரின் கலை நுணக்கங்கள் சிறப்பு. மற்றும் எடிட்டிங்-பிரசன்னா ஜி.கே திறம்பட கொடுத்துள்ளார்.
அசோக்செல்வன், மணிகண்டன், அபிஹாசன் மற்றும் பிரவீன் ராஜா ஆகிய நான்கு பேரையும் மற்றும் நாசரையும் சுற்றி நகரும் கதைக்களம். இந்த இடியாப்ப சிக்கலை எல்லோருக்கும் புரியும் வண்ணம் திறம்பட கையாண்டு நான்கு வெவ்வேறு மனிதர்களின் குணாதிசயங்களை காட்சிப்படுத்தி, அவர்களின் செயலால் ஏற்படும் விபரீத விளைவு எத்தகைய துன்பத்தையும் மீளா துயரத்தையும் ஏற்படுகிறது, அவர்களின் வாழ்க்கையில் பிடிப்பும், புதிய மாற்றத்தையும் ஏற்பட வழி செய்கிறது என்பதை வியத்தகு காட்சிகளால் அசர வைத்து இவரிடம் இத்தனை திறமைகளா என்று ஆச்சர்ய பட வைத்துவிடுகிறார் இளம் இயக்குனர் விஷால் வெங்கட். ஹாட்ஸ் ஆப்.
மொத்தத்தில் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்திருக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் தடுமாறும் நேரத்தில் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக நின்று மாற்றி அமைக்கும் வல்லமையோடு வெற்றி நடை போட்டு இதயங்களை வெல்லும், உள்ளங்களை கொள்ளை கொள்ளும் பயணம்.