சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தின் அறிவிப்பு வெளியானது!

0
221

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தின் அறிவிப்பு வெளியானது!

தனுஷ் நடிக்கும் 50ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, லைக்ஸ்களை குவித்துள்ளது. நடிகர் தனுஷிற்கு கடந்த ஆண்டில் மாறன், தி க்ரே மேன் ஹாலிவுட் படம், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் மாறன் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தி க்ரே மேன் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இருப்பினும் ஹாலிவுட்டில் இந்த படத்தால் தனுஷிற்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை தனுஷிற்கு கொடுத்தது.

திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். நட்பு, காதல், சென்டிமென்ட், தந்தை மகன் உறவு என வித்தியாசமாக வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இதை அடுத்து செல்வராகவன் தனுஷ் காம்போவில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. தற்போது தனுஷின் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிக்க உள்ள 50-ஆவது படம் குறித்த அறிவிப்பு  வெளிவந்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.