கொரோனா தடுப்பு பணிக்கு தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் நிதியுதவி

0
161

கொரோனா தடுப்பு பணிக்கு தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் நிதியுதவி

தமிழகத்தின் முன்னணி தயாரிப்பாளர் தாணு, முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் அளித்துள்ளதோடு முதல்வர் மு.க ஸ்டாலினின் ஒரு மாத ஆட்சியை பாராட்டியும் கடிதம் எழுதியிருக்கிறார். ” பெருந்தொற்று காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில், உங்கள் வேகமான நடையும், விவேகமான முடிவும் ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளவர், 10 லட்சத்திற்கான காசோலையையும் இணைத்து அனுப்பியிருக்கிறார்.

இதற்கு முன்னதாக, கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பல துறையினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல தயாரிப்பாளர் தாணு கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்புநிலை மக்களுக்காக நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும், உங்கள் சந்ததிகளையும் தேக பலம், மனோ பலத்துடன் நீண்ட ஆயுளை அள்ளித் தரும்.
உங்கள் தர்ம சிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்”. இவ்வாறு தாணு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக தாணு தயாரிப்பில் வெளிவந்த ‘கர்ணன்’ வெற்றி பெற்றது. தற்போது சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியின் ‘வாடிவாசல்’ படத்தை தயாரித்து வருகிறார்.