கேப்டன் விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

0
290

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் விஜயகாந்த். பின்னர் 2005ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்தார். பிறகு 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஷ்தை பெற்றது. இதனால் 2011 -2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார். இதனைத் தொடர்ந்து மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி :

“விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவுகூர்கிறேன்.”

ராகுல் காந்தி :

“சினிமா மற்றும் அரசியலுக்கு விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

“சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்தேமுதிக தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.”

சி.பி.ஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன்:

“தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிய பண்பாளர் விஜயகாந்த். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். சகோதர பாசத்துடன் உபசரித்து உற்சாகப்படுத்துபவர். அவரது உடல் பாதிப்பு அவரது அரசியல் மற்றும் பொது வாழ்வுக்கு பெரும் சவாலானது. அதனையும் மன வலிமையோடு, மருத்துவ சிகிச்சை பெற்று, எதிர்த்து போராடி வந்த விஜயகாந்த் காலமானார் என்பது தாங்கவொணா வேதனையளிக்கிறது.”

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

“தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
சிறந்த மனிதநேயர் – துணிச்சலுக்கு சொந்தக்காரர் – தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர்.

நடிகர் சங்கத் தலைவராகவும் – எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் – அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் – தே.மு.தி.க தொண்டர்கள் – நண்பர்கள் – திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் :

“விஜயகாந்த் ஒரு சிறந்த தலைவர், ஒரு பன்முகத்தன்மை கொண்ட கலைஞர். சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட தலைவர். தமிழ்துறை உலகில் முக்கியமான கதாநாயகனாக இருந்தவர். குறிப்பாக அவரின் திரைப்படங்கள் தேசபக்தியை வெளிபடுத்தும், சமூக அக்கறைக்கொண்ட திரைப்படமாக இருக்கும். அவருக்கு சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்பியவர்”.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்:

“ஒரு வெள்ளந்தியான நேர்மறையான நல்ல மனிதர். அரசியல், நண்பன் இப்படி எல்லா நிலைகளிலும் ஒரே முகம் படைத்தவர்… அம்முகம் நல்ல முகம், அவ்வளவுதான்.  அரசியல், திரைப்படத்துறை என்று அனைத்திலும் இவருக்கு ஒரே முகம்தான். இப்படி சாதாரண மனிதருக்கு இருக்க வேண்டிய அரிதிலும் அரிதான பணி இவருக்கு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கூறவேண்டும் என்றால் அவர் நல்லவர். இதற்கு மேல் அவரை விமர்சனமே செய்ய முடியாது. இவரின் இழப்பினை தனிப்பட்ட இழப்பாக ஒவ்வொருவரும் நினைப்பதற்கு காரணம் இதுதான். இந்த அளவிற்கு ஒவ்வொருவரின் மனதிலும் தனது இரக்கக் குணத்தினால் நெருக்கமானவர் இவர். என்னை பொறுத்தவரை பல உயரங்களை தொட்டிருக்க வேண்டிய மனிதர்”.

‘பொன்மனச் செல்வர்’ விஜயகாந்த் மறைவு! : திரையுல பிரபலங்கள் இரங்கல்!

https://www.chennaicitynews.net/cinema/பொன்மனச்-செல்வர்-விஜயகா/ ‎

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்:

“கேப்டன் விஜயகாந்த் மறைவு துயரத்தை அளிக்கிறது. அவரது மறைவு தேமுதிகவுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்புதான். கேப்டன் விஜயகாந்த் நேர்மையானவர், துணிச்சலானவர், தைரியமானவர். கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவரானார். உடல் நலம் சரியாக இருந்திருந்தால் அரசியலில் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார். நாளை தமிழகம் முழுவதும் விசிக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் விஜயகாந்த் மறைவையொட்டி ரத்து செய்யப்படுகிறது. வரும் ஜனவரி 4- ம் தேதிக்கு அது மாற்றப்படுகிறது”.

கவர்னர் ஆர்.என்.ரவி:

“சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன.”

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்:

இந்த அறிக்கையில், புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் திரு.விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது.

திரு.விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது.

சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலர்களால் அவர் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.
கடந்த 2014ம் ஆண்டு பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் திரு விஜயகாந்த் அவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்ததால் அவர் அந்த முதல்வர் நாற்காலி வரை செல்ல முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

திரு. விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி ஸ்ரீமதி. பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன், என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.