கேன்ஸ் விழாவில் முதல்முறையாக பா.ரஞ்சித் – சிவப்பு கம்பள வரவேற்பில் வைரலாகும் புகைப்படம்

0
208

கேன்ஸ் விழாவில் முதல்முறையாக பா.ரஞ்சித் – சிவப்பு கம்பள வரவேற்பில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், முதன்முறையாக கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் கடந்த 2012 ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பா. ரஞ்சித் தனது முதல் படத்திலேயே தனித்துவமான கதைக்களம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி வைத்தார். அதன்பிறகு, வட சென்னை பகுதியில் சுவரை வைத்து நிலவும் அரசியலை மிக அழகாகவும், ஆழமாகவும் ‘மெட்ராஸ்’ படத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களிடையே வித்தியாசமான இயக்குநராக பா. ரஞ்சித் ஸ்கோர் செய்தார்.

தொடர்ந்து ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்த பா. ரஞ்சித், நீலம் புரொட்க்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்தார். தற்போது, ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், பிரான்சில் நேற்று துவங்கிய கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சத்திற்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்துடன் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘வேட்டுவம்’ படம் மற்றும் இணையதொடரை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார். வருகிற 28-ம் தேதி வரை நடைபெறுகிற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுவதையொட்டி அவர் கலந்துகொண்டார். அவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விழாவில் கமல்ஹாசன், மாதவன், தமன்னா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, ஏ.ஆர். ரஹ்மான் உள்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர். கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.