கார்கி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சூர்யா சாருக்கு நன்றி – சாய் பல்லவி
பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் கார்கி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில்
இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் பேசும்போது,
கார்கி படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் அனைவரும் ஆதரவு கொடுத்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு வைத்த முதல் புள்ளி. இடைவேளையிலேயே நேர்மறையான விமர்சனங்கள் வந்தது. இதுபோன்று மற்றொரு வெற்றி மேடையில் சந்திப்போம். மிர்ச்சி செந்தில் இப்படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு மிகப் பெரியது. ஆனால், அவருடைய பகுதியை விரைவில் வெளியிடுவோம்.
நடிகை சாய் பல்லவி பேசும்போது,
‘பத்திரிகையாளர் காட்சியை பார்த்து விட்டு படத்தை பற்றி மட்டுமல்லாமல், நடிகர்கள், வசனம், தொழில்நுட்பம் என்று அனைத்து பணிகளை பற்றியும் பாராட்டி எழுதியதற்கு மிக்க நன்றி. மக்களிடம் கொண்டு சென்ற சூர்யா சாருக்கு சிறப்பு நன்றி. இப்படத்தை சூர்யா சார் வரைக்கும் கொண்டு சென்ற தயாரிப்பாளர் சக்தி சாருக்கு நன்றி. நான் திரையரங்கிற்கு சென்று மக்களோடு படம் பார்த்தேன். அவர்கள் பாராட்டுவதை விட உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.
காளி வெங்கட் பேசும்போது,
பெரிய படங்களுக்கு தான் இடைவேளையில் இருந்தே விமர்சனம் ஆரம்பித்து விடும். அந்த வரிசையில் கார்கி படம் இருப்பதில் மகிழ்ச்சி. தத்து பிள்ளைக்கு தாய்பால் கொடுத்தது போல, பத்திரிகையாளர்கள் இப்படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். இப்படத்தில் ஒரு வசனம் பேச கிட்டத்தட்ட 9 டேக் போனது.
ஒரு கலைஞர் தனது கதாபாத்திரத்தை எந்தளவுக்கு உள்வாங்கியிருந்தால் சாய் பல்லவி வசனம் இல்லாமல் உடல் மொழியிலேயே கூறி இருப்பார். அப்பாவை பார்க்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் அருமையாக நடித்திருப்பார். குறுகிய காலத்தில் இப்படம் அனைவரையும் சென்று சேர்ந்திருக்கிறது. எனக்கு கார்கி மிகவும் முக்கியமான படம்’ என்றார்.
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பேசும்போது,
‘கார்கி ஒரு வித்தியாசமான படம் என்று நான் சொல்ல தேவையில்லை. இயக்குனர் கவுதமுக்கு இருந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். கதையை கூறியதும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். உடனே நாளைக்கே படப்பிடிப்பு வந்து விடுங்கள் என்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்பில் ஏன் கவுதம் இப்படி அநியாயம் செய்கிறீர்கள். எனக்கு முழுதாக கதையே தெரியாது. ஆனால், இரண்டாவது நாளே எப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க முடியும் என்று கேட்டேன். நான் சொல்லி தருகிறேன் என்றார். சாய் பல்லவியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் தற்போது அழகான நடிகைகளுக்கு அப்பாவாக நடித்து வருகிறேன். முதலில் நயன்தாராவிற்கு அப்பாவாக நடித்தேன். இப்போது சாய்பல்லவிக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். காளி வெங்கட் யார் என்பது அவர் நடிப்பில் உணர்த்தி விடுவார். அவர் நடிகர் அல்ல நட்சத்திரம்’ என்றார்.
திருநங்கை சுதா பேசும்போது,
இந்த நேரத்தில் இயக்குனருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு ஏன் திருநங்கையை தேர்ந்தெடுத்திருக்கிறார்? என்று யோசித்தேன். இப்படம் பார்த்த பிறகு எனது தோழிகள் பாராட்டினார்கள். என்னுடன் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் பேசுவார்கள். ஆனால், இப்படம் வெளியான பிறகு கேரளாவில் இருக்கும் தூரத்து உறவினர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.
காளிவெங்கட் மாதிரி மனிதரை இனிமேல் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. எல்லோரும் சாப்பிட்டார்களா? என்று பார்த்துவிட்டு தான் அவர் சாப்பிடுவார். ஆகையால், தான் அவர் நாயகன் ஆகியிருக்கிறார்’ என்றார்.
மிர்ச்சி செந்தில் பேசும்போது,
தமிழ் சினிமாவை அசத்திய படம் கார்கி. திரையரங்குகளில் வெளியாகும் முன்பு இப்படத்தை பார்க்கும்படி இயக்குனர் அழைத்தார். எனக்கு மட்டும் பிரத்யேக காட்சியை காண்பித்தார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படத்தை காட்டினீர்கள்? என்று கேட்டேன். அப்போது இயக்குனர் நீங்கள் நடித்த காட்சி இப்படத்தில் துண்டாக இருக்கிறது, உங்களிடம் இப்படத்தை காட்டிவிட்டு பிறகு நீக்கி விடலாம் என்று இருக்கிறோம் என்றார். ஒரே ஒரு காட்சியில் நடித்த எனக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து என்னிடம் உத்தரவு கேட்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் கூறியது போலவே நான் நடித்த காட்சி இப்படத்திற்கு தேவையில்லை என்று தோன்றியது. ஆகையால், நீங்கள் நீக்கிவிடுங்கள் என்று மனதார கூறினேன்.
சூரரைப் போற்று படத்தில் நான் டிரைலரில் மட்டும் தோன்றுவேன். இப்படத்திற்கு தற்போது 5 தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. அதேபோல் இப்படத்திற்கும் இப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது,
கார்கி படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றியை அறைகூவல் விட்டு கூறியது பத்திரிகையாளர்கள் தான். விமர்சனங்களும், பத்திரிகையாளர்களும் இப்படத்தைத் தூக்கிப் பிடித்தது தான் வெற்றிக்கு காரணம். இப்படத்தின் விமர்சனத்தை தனித்தனியாக வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். இப்படத்தை முதல்முதலாக பார்க்கும்போது அனைவருக்கும் என்ன உணர்வு இருந்ததோ? அதே உணர்வுதான் நான் பார்க்கும்போதும் இருந்தது.
இப்படத்தை தெருத்தெருவாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு 2டி ராஜாவிடம் சென்று இப்படத்தைப் பற்றிக் கூறினேன். சூர்யா அண்ணன் இதுபோன்ற படங்களுக்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார் என்று கூறினார். அதன்பிறகு இப்படத்தைப் பார்த்த சூர்யா சார், இந்த படத்திற்கு ஆதரவு தரவில்லையென்றால், வேறு எந்த படத்திற்கு தரப்போகிறோம் என்று கூறினார். மேலும், இப்படம் செலவிட்ட தொகையை மீட்டு தருமா? என்று கேட்டார். நிச்சயம் அவர்கள் செலவு செய்ததை விட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு சம்பாதித்து விடும் என்று கூறினேன். ஆகையால் சூர்யா சாரிடம் பேசி அவருடைய 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து வெளியிட்டோம்.
சூரரைப் போற்று 5 தேசிய விருதுகளை சூறையாடி வந்துருக்கிறது. இப்படம் ஊரடங்கு சமயத்தில் ஓடிடி-யில் வெளியாகியது. அப்போது சூர்யா சார் என் நிறுவனத்தை அவர்கள் வெளியில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், என்னுடைய லோகோவை போட்டு சக்தி பிலிம் ஃபேக்டரி இப்படத்தை விநியோகிக்கிறது என்று வெளியிட்டார்கள். நான் சூர்யா சாருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.