கலைப்புலி எஸ்.தாணு – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி உறுதியானது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
283

கலைப்புலி எஸ்.தாணு – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி உறுதியானது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர், இசையமைப்பாளர் என இவர்களின் கூட்டணிக்காகவே ரசிகர்களிடம் ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்றால் அது யுவன்சங்கர்ராஜா செல்வராகவன் கூட்டணியால் மட்டுமே முடியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என இந்த கூட்டணி தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் ‘என்ஜிகே’ படத்தில் இணைந்தனர்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அன்பே பேரன்பே’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க 8-வது முறையாக செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் செல்வராகவன், “8-வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். அசுரன், கர்ணன், படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.

ஏற்கெனவே தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அத்ரங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம்’ படத்தில் நடித்து வரும் செல்வராகவன் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தனுஷ் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

முன்னதாக தனுஷ் நடிக்க இருக்கும் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளை செல்வராகவன் தொடங்கிவிட்டதாக தனது ட்விட்டர் பக்க பதிவின் மூலமாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.